லியோ படத்தின் நடிகர் விஜய்யின் காட்சிகள் நிறைவடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.


லோகேஷ் கனகராஜ் ட்வீட்


இது குறித்து பதிவிட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “விஜய்யின் காட்சிகள் நிறைவடைந்தன.  இந்த இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி!” என ட்வீட் செய்துள்ளார்.


 






கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட் அடித்த மாஸ்டர் படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘லியோ’.


 


நடிகை த்ரிஷாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், அர்ஜுன்,  சஞ்சய் தத், இயக்குநர்கள் கவுதம் மேனன், மிஷ்கின், நடிகைகள் மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், நடிகர்கள் மன்சூர் அலிகான்,  ஜோஜூ ஜார்ஜ் என தமிழ் தொடங்கி பல மொழி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க,  மனோஜ் பரமஹம்சா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


காஷ்மீரில் தொடங்கி பயணம்


இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் காஷ்மீரில் நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவும் கொட்டும் பனியில் இரவு பகல் பாராமல் 50 நாள்களுக்கு மேல் பணியாற்றிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே விஜய்யின் காட்சிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார். 


ஓவர் லோடான நட்சத்திரப் பட்டாளம்


லியோ படத்தில் ஏற்கெனவே மாபெரும் நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ள நிலையில், முன்னதாக இப்படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் ராம் சரண் இருவரும் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.


மேலும் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் இணைந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நாளுக்கு நாள் இப்படத்தில் இந்த நட்சத்திரம் இணைகிறார், அந்த நட்சத்திரம் இணைகிறார் என வெளியான செய்திகள் ட்ரோல்களை சந்தித்தன. ‘இதுக்கு இல்லையா ஒரு எண்டு’ என ரசிகர்கள் மீம்களை இறக்கித் தள்ளினர்.


இச்சூழலில் விஜய்யின் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் லியோ படத்தின் ஒட்டிமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.