லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு அரங்கம் அதிர ரசிகர்கள் வரவேற்பு அளித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டரில் செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படம் வெளியானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஆனாலும் வசூலில் பெரிய அளவில் ஹிட்டடித்தது. இப்படம் 12 நாட்களில் ரூ.540 கோடி வசூலை பெற்றதாக படக்குழு நேற்று (அக்டோபர் 31) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனிடையே அதிக பாஸ் கோரிக்கை, பாதுகாப்பு பிரச்சினை காரணமாக செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை.
இதனால் அதிருப்தியான ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக வெற்றி விழா கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (நவம்பர் 1) நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் உள்ள ரசிகர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து பிரபலங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.