லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசிய ஒரு விஷயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், ஜனனி, சாண்டி மாஸ்டர், மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன் என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்தார்.
லியோ படம் ரூ.540 கோடி வசூலை இதுவரை பெற்றுள்ளது. விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய சாதனையாக இப்படம் அமைந்துள்ளது. இதனிடையே சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று (நவம்பர் 1) பிரமாண்டமாக நடைபெற்றது. ஏற்கனவே பல பிரச்சினைகள் காரணமாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் முதல்முறையாக லியோ படத்துக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் எகிறியது.
நிகழ்ச்சியில் பேசிய விஜய், படக்குழுவினரை பாராட்டி தள்ளினார். தொடர்ந்து அப்படியே வழக்கம்போல குட்டிக்கதை பக்கம் வண்டியை திருப்பினார். பின்னர் சினிமாவை சினிமாவாக பாருங்கள் என லியோ பாடல் வரிகள் சென்சாரால் மாற்றப்பட்டதற்கு கருத்து தெரிவித்தார். அப்படியே ஒரு ஃப்ளோவில் சென்று கொண்டிருந்த விஜய், ஒரு கட்டத்தில் அரசியல் நகர்வு குறித்து சூசகமாக பேச தொடங்கினார். அதில் ஒரு சின்ன விஷயத்தையும் குறிப்பிட்டார்.
அதாவது, “ஒரு குட்டிப்பையன் அவங்க அப்பா சட்டையை எடுத்து போட்டுக்கிடுவான். அவரோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவின் சேரில் ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த சட்டை அந்த பையனுக்கு செட்டே ஆகாது. வாட்ச் கையிலேயே நிக்காது. அந்த சேர்ல உட்காரலாமா? வேண்டாமா?, தகுதி இருக்கா? இல்லையா? என எதுவும் அவனுக்கு தெரியாது. அப்பாவின் சட்டை, அப்பா மாறி ஆகணும்ன்னு கனவு, அதில் என்ன தவறு இருக்கு?. அதனால் பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்றும் பண்ண முடியாது” என தெரிவித்தார்.
விஜய் தெரிவித்த இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முக்கிய அரசியல் பிரபலம் விஜய் படம் ரிலீசாக விடாமல் பிரச்சினை செய்ததாக லியோ படம் ரிலீசுக்கு முன் சர்ச்சை எழுந்தது. அதேபோல் அவர் தான் அரசியலில் விஜய்க்கு மிகப்பெரிய போட்டியாக இருப்பார் என்ற கருத்து நிலவி வந்தது. விஜய், தன் கதையில் அப்பா - மகன் என குறிப்பிட்டது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியை தான் என கூறி நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வெளியே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் விஜய் தேவையில்லாமல் சில விஷயங்களை பேசியதாக வெற்றி விழாவில் பேசிய ரசிகர்களும் குறிப்பிட்டனர்.
ஏற்கனவே விரைவில் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக சொல்லப்படும் நிலையில், பிற கட்சியினரை, முக்கிய நபர்களை தாக்கி பேசுவதை இப்போதே தொடங்கி விட்டாரா என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது.