ஒரு குட்டிக் கதை


ஒரு மாணவன் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கிறார். அடுத்த நாள் அவனது ஆசிரியர் அவனிடம் “நீ ஏன் நேற்று வரவில்லை?” என்று கேட்டால், அவன் “என் தாத்தா இறந்துவிட்டார்” என்று  பொய் சொல்கிறான். ஆசிரியர் அவனை வகுப்பில் அனுமதிக்கிறார். உண்மை தெரிந்து அந்த மாணவரிடம் “ஏன் பொய் சொன்னாய்?” என்று கேட்டால், அதற்கு அந்த மாணவன் “நான் பொய் எல்லாம் சொல்லவில்லை, என் தாத்தா இறந்துவிட்டார்” என்று உண்மையைத்தான் சொன்னேன் “நேற்று இறந்துவிட்டார் என்று சொல்லவில்லையே” என்று சமாளித்தான் என்றால் அதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?


லியோ ஃபிளாஷ்பேக் - லோகேஷ் கனகராஜ்




லியோ படத்தில் லியோவுக்கான ஃபிளாஷ்பேக் காட்சிகள் இன்னும் விரிவாக இருந்திருக்கலாம் என்பதே படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இப்படியான நிலையில் லியோவின் ஃபிளாஷ்பேக் பகுதிகள் மன்சூர் அலிகானின் பார்வையில் தான் சொல்லப்பட்டது என்றும், அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் லோக்கி கூறியுள்ளார்.


லோகேஷ் கனகராஜிடம் இருந்து இப்படியான பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்புக்கு முன்பாக ”ஒவ்வொரு கதையும் ஒரு பார்வையில் இருந்து சொல்லப்படும். இது என்னுடைய பார்வை” என்று மன்சூர் அலிகானுக்கு வசனம் இருந்ததாகவும், படத்தொகுப்பாளர் ஃபிலோமின் ராஜ் அந்த வசனம் இருந்தால் ரசிகர்கள் அடுத்த 40 நிமிடம் வரும் கதையை பொய் என்று நம்பத்தொடங்கி விடுவார்கள் என்று எச்சரித்ததாகவும், இதனால் தான் இந்த வசனத்தை நீக்கிவிட்டதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார். ஒரு படம் வெளியாகி அதை ரசிகர்கள் பார்த்து முடித்து இத்தனை நாட்களுக்குப் பின் அந்தப் படத்தின் பாதி கதை பொய் என்றால் அதை வணிக சினிமாவில் மக்களை எமாற்றுவதற்கு இருக்கும் சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?


துருவங்கள் பதினாறு, இசை




கடந்த 2016ஆம்  கார்த்திக் நரேன் தனது முதல் படமான ‘துருவங்கள் பதினாறு’ படத்தை வெளியிட்டார். இந்தப் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்ட், படத்தில் இருக்கும் ஒரு முக்கியக் கதாபாத்திரம் ஃபேஸ் சர்ஜரி செய்து வேறு ஒரு முகமாக அடையாளம் மாறியிருப்பார். இந்த உண்மை படத்தின் இயக்குநரைத்  தவிர்த்து பார்வையாளர்கள் தெரிந்துகொள்ள எந்த சாத்தியமும் இருக்காது.


திடீரென்று கடைசியில் ஒரு ட்விஸ்ட் மாதிரி இதைப் பயன்படுத்தி இருப்பார் இயக்குநர். அதே மாதிரி எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘இசை’ படத்தில் ஒட்டுமொத்த கதையும் முடியும் தருணத்தில் அது எல்லாம் ஒரு கனவு என்று முடித்திருப்பார். இந்த இரண்டு படங்களும் கதைசொல்லல் என்கிற பெயரின் ரசிகர்களை ஏமாற்றுகின்றன என்கிற விமர்சனம் வைக்கப்பட்டது.  


பீட்சா




கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘பீட்சா’ திரைப்படம் இதே மாதிரியான ஒரு திரைக்கதை தான். பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் விஜய் சேதுபதி தன்னைச் சுற்றி இருக்கும் எல்லாரையும் நம்பவைக்க தானே ஒரு கதையை உருவாக்கி அதை நம்பவும் தொடங்குகிறான். பீட்சா திரைப்படம் மட்டுமே இந்த வரிசையில் ஒரு பொய்யை மிக லாவகமான முறையில் பயன்படுத்தி விமர்சனங்களில் இருந்து தப்பித்தது.


அதிருப்தியில் ரசிகர்கள்!


சினிமாவின் எதார்த்தத்தை புரிந்துகொண்டு அதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்துபவர் லோகேஷ் கனகராஜ். “என்னதான் இருந்தாலும் நாங்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகிறோம். ஆனால் இரண்டாயிரம் ரூபாய் சம்பாரித்து 200 ரூபாயை ஒரு படத்திற்கு செலவு செய்யும் சாமானியனின் மதிப்பு அதிகம்” என்று லோகேஷ் பேசியது பல்வேறு ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது . இப்போது அதே இயக்குநர் லியோ படத்திற்கு இப்படி கூறியுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடையவே செய்துள்ளது. லோகேஷ் கனகராஜுடன் உடன்படாத ரசிகர்கள் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் பேசிய காணொளி ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். 


ஒரு நல்ல இயக்குநரின் அடையாளம்






இந்த காணொளியில் வெற்றிமாறன் “ஒரு படம் வெளியாகி அது மக்கள் முன் வைக்கப்பட்டப் பின் எனக்கு தயாரிப்பாளுடன் பிரச்னை. நடிகருடன் பிரச்னை, இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருந்தால் என்கிற மாதிரியான காரணங்கள் சொல்வதில் எந்த பயமும் இல்லை. எந்தக் காட்சிகளை படத்தில் வைக்க வேண்டும் எதை நீக்க வேண்டும் என்கிற தெளிவு இருப்பதே ஒரு நல்ல இயக்குநரின் அடையாளம்” என்று  கூறியுள்ளார். வெற்றிமாறனின் இந்தக் கருத்துடன் லோகேஷ் கனகராஜ் உடன்படுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதும் இல்லை!