நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் இருந்து முதல் பாடலாக ‘நான் ரெடி’ பாடல் வரும் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் இந்த வார்த்தை விஜய் அரசியலின் வருகைக்கான குறியீடா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
அரசியலில் கால் பதிக்கும் விஜய்
தமிழ் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாது என சொல்வார்கள். அந்த வகையில் முதலமைச்சர்களும் சரி, அரசியல் கட்சியின் தலைவர்களாகவும், தொண்டர்களாவும் பல நடிகர், நடிகைகள் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து அரசியலின் அடுத்த வாரிசாக நடிகர் விஜய் வருவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
இதற்கான விதையை அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே விதைத்து விட்டார் என்று சொல்லலாம். அவரின் ரசிகர் மன்றம் ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஆக மாற்றப்பட்டது. சமூகத்தில் நடைபெற்ற பல பிரச்சினைகளில் வெளிப்படையாக பங்கேற்றதோடு, பாதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்றும் ஆறுதல் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவும் ஆதரவு தெரிவித்தார். ஆனால் அதன்பின் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களால் அவர் அரசியலில் பெரிய அளவில் அடியெடுத்து வைக்காமல் இருந்தார்.
சமீபகால செயல்பாடுகள்
ஆனால் சமீபகாலமாக மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் எல்லாம் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்துவது போல அமைந்துள்ளது.2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் பலர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். விஜய்யின் அனுமதியுடன் தான் இது நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. இதில் ஜெயித்தவர்களை சந்தித்து குரூப் ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டார்.
அவ்வப்போது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தும் ஆலோசனை மேற்கொண்டார். அப்போதே விஜய்க்கு அரசியல் ஆசை மீண்டும் வந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே கடந்த ஓராண்டாகவே விஜய் மக்கள் இயக்கத்தினர் மக்களோடு ஒன்றிணையும் வகையில் பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பேத்கர், தீரன் சின்னமலை போன்ற தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தது, வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு பால், ரொட்டி வழங்குவது, உலக பட்டினி தினத்தன்று ஏழை மக்களுக்கு ஒருவேளை இலவச உணவு வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
விஜய்யின் அரசியல் கவனம் எல்லாம் இளைஞர்களை குறிவைத்து இருக்கும் நிலையில், வருங்கால தலைமுறையினரையும் கவனம் ஈர்க்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நாளை (ஜூன் 17) 10,12 ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை வரவழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.
லியோ அப்டேட்டில் குறியீடு
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடல் வரும் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ’நான் ரெடி’ என்ற வார்த்தை அவரது அரசியலுக்கான அர்த்தமாகவே பார்க்கப்படுகிறது.