லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 19ம் தேதியான நாளை திரையரங்குகளில் வரத் திட்டமிடப்பட்டுள்ளது. 


லியோ திரைப்படத்திற்கு முன்னதாக நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கடந்த 2021ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற திரைப்படமான ‘மாஸ்டர்’ க்கு பிறகு இணைந்துள்ளனர். 


சமீபத்தில், லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய வதந்திகள் பரவ தொடங்கியது. அதிலும்,  முக்கியமாக அமைச்சர் உதயநிதிதான் தனது அரசியல் பலத்தால் அழுத்தம் கொடுத்து ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த விடவில்லை என வதந்திகள் பரவியது. 


மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பட தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ், தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு பகுதிகளுக்கான விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்குமாறு லியோ படக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்டது. 


தற்போது, இந்த வதந்தியெல்லாம் பொய் என நிரூபிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோ படத்தை பார்த்து எக்ஸில் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதையடுத்து, அந்த போஸ்ட்டை பலரும் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர். 


என்ன சொன்னார் பதிவில்..? 


தளபதி விஜய் அண்ணாவின் லியோ 👍🏽👍🏽 , இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  சிறந்த படத்தொகுப்பு, அனிருத் இசை வேறவெலல், அன்பறிவ், 7ஸ்கிரீன்ஸ்டுடியோ 👏👏👏 #LCU 😉! ஆல் தி பெஸ்ட் டீம்! என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மேலும், லியோ திரைப்படம் LCUதான் என்ற மிகப்பெரிய ஹிண்டையும் வெளியிட்டு பரபரப்பை கொடுத்துள்ளார். 



'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது.


பிளக்ஸ், பேனர்கள் வைக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை: 


லியோ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், லியோ படத்திற்கு அனுமதியின்றி பிளக்ஸ், பேனர்கள் வைக்கக் கூடாது என ரசிகர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் லியோ படத்திற்கு ராட்சத விளம்பர பதாகை வைப்பதற்கு தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்தது.


முன்னதாக, லியோ திரைப்படத்தை அக்டோபர் 20ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என்று ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் நாளை ஹைதராபாத்தில் லியோ படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. லியோ படத்தின் டைட்டில் தங்களுடையது என சிலர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, D Studio என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் லியோ படத்தின் தெலுங்கு பதிப்பை அக்டோபர் 20ஆம் தேதி வரை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.