நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 






நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மாஸ்டர் படத்திற்கு பிறகு 2வது முறையாக இணைந்துள்ளது. விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. பேன் இந்தியா படமாக உருவாகியுள்ள லியோ படமானது அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.  நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளது. 


அதன்படி அர்ஜூன், சஞ்சய் தத், இயக்குநர் மிஷ்கின், நடிகை ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஜார்ஜ் மரியன், அபிராமி, மடோனா செபாஸ்டியன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் லியோ படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது. 


இதனிடையே ஜூன் 22 ஆம் தேதி அதவது நாளை  விஜய்யின் 49வது பிறந்தநாள் வரும் நிலையில், லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி’ பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பாடலில் விஜய்யுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இடம் பெற்றுள்ளார்கள் . இந்த பாடலின் செலவு விஜய்யால்  ரூ.1 கோடி குறைந்துள்ளதாகவும் தயாரிப்பாளர் லலித் குமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.


ஏற்கனவே நா ரெடி பாடல் வெளியாகவுள்ளது என தெரிவிக்கப்பட்டதே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படவுள்ளது என்ற அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திலே உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் ’நா ரெடி’ பாடலை நடிகர் விஜய் தான் பாடியுள்ளார். இதுதொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஷ்ணு எடவன் எழுதிய இந்த பாடல் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிப்பிடும் வகையில் உள்ளது.மேலும் விஜய் அறிமுகமான காலக்கட்டத்தில் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படங்களில் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பாடலின் நடுவில் ‘இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்’ என்ற வாசகம் இடம் பெற்றது. இந்நிலையில் அதனை மீண்டும் குறிப்பிட்டு லியோ படத்தின் பாடல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.