லியோ திரைப்படத்தின் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு உள்துறை செயலரை லியோ வழக்கறிஞர்கள் சந்தித்து வருகின்றனர்.


லியோ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பது பற்றிய அரசின் முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்தது.


நாளை மறுநாள் அக்.19 லியோ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு நேற்று முன் தினம் தொடங்கி முதல் வாரம் முழுவதும் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்துவிட்டது. முன்னதாக தமிழ்நாடு அரசு லியோ படத்துக்கு நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகளுக்கு அனுமதி, சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியதுடன், முதல் காட்சி 9 மணிக்கே தொடங்கப்பட வேண்டும். 1.30 மணிக்குள் இறுதிக் காட்சி நிறைவடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 


இதனிடையே அதிகாலை சிறப்புக்காட்சிகள் வழங்கக் கோரி படத்தயாரிப்பு நிறுவனம் நேற்று  சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியதுடன் அவசர வழக்காக இதனை எடுத்து தீர்ப்பளிக்கவும் கோரியது. இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு அதிகாலை 4 மணி சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்க மறுத்து உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 


காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி முதல் அனுமதி கோரி விண்ணப்பிக்க பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும், தயாரிப்பு நிறுவன கோரிக்கையை பரிசீலித்து நாளை மதியத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, லியோ 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்குவது குறித்து இன்று மாலை 4 மணிக்கு தெரிய வரும் என செவென் ஸ்கீர்ன் ஸ்டுடியோ தரப்பு வழக்கறிஞர் முன்னதாகத் தெரிவித்தார்.


மேலும், “தமிழ்நாடு அரசுடன் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் தமிழ்நாடு உள்துறை செயலரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். மனுவை பரிசீலித்து முடிவை மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில்  லியோ திரைப்பட தயாரிப்பாளர் சங்க வழக்கறிஞர்கள் சென்னையில் உள்துறை செயலர் அமுதா ஐஏஎஸ்ஸை சந்தித்து வருகின்றனர். செவன் ஸ்க்ரீன் பட நிறுவன வழக்கறிஞர் வேலு கார்த்திகேயன் உள்ளிட்டோர் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.


லியோ 7 மணி காட்சி பற்றிய முடிவு தெரியாத நிலையில், பல திரையரங்குகளும் முதல் நாள் புக்கிங்கை இன்னும் தொடங்காமல் வெயிட்டிங்கில் வைத்து வருகின்றனர். இது குறித்து முன்னதாக வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்துள்ள அர்ச்சனா கல்பாத்தி, மாலை 6 மணிக்கு அப்டேட் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.




இதனிடையே புதுச்சேரியில் லியோ திரைப்படதுக்கு காலை ஏழு மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.