‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழாவில் நடிகை ரோஜா தனது சினிமா ரீ-என்ட்ரி குறித்தும், நடிகர் தர்ஷன் கணேசன் குறித்தும் பேசினார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.

Continues below advertisement

T.G. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விழாவில் பேசிய ரோஜா, தனது முதல் படமான ‘செம்பருத்தி’ முதல் சினிமாவில் நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் எந்தவொரு காட்ஃபாதரின் பின்புலமும் இல்லாமல் பயணிக்க முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறினார். தனது முதல் படத்துக்கு இசையமைத்த இளையராஜாவே தனது ரீ-என்ட்ரி படத்துக்கும் இசையமைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

Continues below advertisement

‘லெனின் பாண்டியன்’ படத்தில் நடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நண்பர் சுப்பு என ரோஜா தெரிவித்தார். இயக்குநர் பாலச்சந்திரன் வீட்டுக்கு வந்து கதையை கூறிய விதம் தன்னை கவர்ந்ததாகவும், ஒவ்வொரு கதாபாத்திரம் மற்றும் காட்சியை அவர் விளக்கிய விதம் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

சிவாஜி கணேசன் குடும்பத்தின் மூன்று தலைமுறையினருடன் நடித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்தார். சிவாஜி கணேசன், பிரபு ஆகியோருடன் நடித்துள்ள நிலையில், தற்போது தர்ஷன் கணேசனுடனும் நடித்துள்ளதாக கூறினார். தர்ஷன் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் இயல்பாகவும் எளிமையாகவும் பழகியதாகவும், சக நடிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

நடிகர் தர்ஷன் கணேசன், தனது அறிமுகப் படத்தில் வாய்ப்பு வழங்கிய T.G. தியாகராஜன், செல்வி, செந்தில், அர்ஜுன் உள்ளிட்ட சத்யஜோதி பிலிம்ஸ் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். சிறுவயது முதல் சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து வளர்ந்ததாகவும், நடிப்பை சீரியஸாக எடுத்தபோது இருந்த சுய சந்தேகத்தை கடுமையான பயிற்சியின் மூலம் கடந்து வந்ததாகவும் கூறினார்.

இயக்குநர் வெங்கட் பிரபு, கங்கை அமரன் இந்தப் படத்தில் மிகவும் இயல்பாக நடித்துள்ளதாக பாராட்டினார். தர்ஷனின் சிறிய ரியாக்ஷன்களும் நடிப்பும் கவனிக்க வைக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார். இளையராஜாவின் இசையும் படத்துக்கு முக்கிய பலமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது. நடிகை ஸ்ரித்தா ராவ், படத்தில் தனக்கு வழங்கப்பட்ட வசனங்கள் புதிய அனுபவமாக இருந்ததாகவும், ரோஜாவுடன் நடித்தது கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இருந்ததாகவும் தெரிவித்தார். தயாரிப்பாளர் ராம்குமார், தர்ஷன் கணேசன் மற்றும் ஸ்ரித்தா ராவ் இருவரும் புதுமுகங்களாக சிறப்பாக நடித்துள்ளதாக கூறினார். கங்கை அமரன், தனது அண்ணனின் ஆசீர்வாதத்தில் இயக்குநராக அறிமுகமான பின்னர் பல்வேறு பணிகளை சினிமாவில் செய்துள்ளதாகவும், தற்போது நடிகராக வாய்ப்பு வழங்கிய தியாகராஜனுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். விழாவில் படக்குழுவினர் அனைவரும் செப்டம்பர் 25ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.