வாரிசு நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு என்பது எளிதில் கிடைத்து விடலாம் ஆனால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் திறமை மிக மிக அவசியமானது. அப்படி வாரிசு நடிகராக உள்ளே நுழைந்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றவர் நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷின் மகன் ஆனந்த் பாபு. அவர் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


 



எப்படி கிடைத்தது சினிமா வாய்ப்பு :


ஆனந்த் பாபுவுக்கு நடிக்க வேண்டும் என்பதில் எல்லாம் பெரிய ஆர்வம் இல்லை. ஏன் அவரின் தந்தைக்கும் அதில் ஆசையும் இல்லையாம். ஆனால் மகனுக்கு என்றுமே அப்பாவின் நடிப்பின் மீதும் நடனத்தின் மீதும் மிகுந்த பிரமிப்பு இருந்ததுண்டு. அப்படிபட்டவர் சினிமாவில் நுழைந்ததற்கு பின்னால் ஒரு ஸ்வாரஸ்யமான கதை உள்ளது. கல்லூரி கலாச்சார விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டி.ராஜேந்தர், ஆனந்த் பாபுவின் நடனத்தை பார்த்து அசந்து போய் விசாரித்த போது தான் அது அவர் மிகவும் ரசிக்கும் நடிகர் நாகேஷின் மகன் என்பது தெரியவந்தது . அடுத்த நாளே வாய்ப்பு வீட்டு வாசலை தேடி வந்தது. அப்படம் தான் டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'தங்கைக்கோர் கீதம் ' திரைப்படம். 


தமிழ் சினிமாவில் டிஸ்கோ டான்ஸ் :


அப்படத்தில் இடம்பெற்ற ‘தினம் தினம் உன் முகம்’ பாடலில் ஆனந்த் பாபுவின் நடனத்தை பார்த்து திரையுலகமே ஆச்சரியப்பட்டு போனது. உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு ஒரு நடிகர் இத்தனை சிறப்பாக ஆட கூடியவர் என்றால் அது ஆனந்த் பாபு தான் என கொண்டாடப்பட்டார். டிஸ்கோ டான்ஸ் என்ற ஒன்றை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சேரும். பிரபு தேவாவுக்கு முன்னர் தமிழ் சினிமாவை நடனத்தால் கட்டிப்போட்டவர் ஆனந்த் பாபு. 


 



பாலச்சந்தர் செதுக்கிய ஆனந்த் பாபு :


அப்பாவை போலவே மிகவும் பிஸியான நடிகரானார் ஆனந்த் பாபு. பாடும் வானம்பாடி, உதயகீதம், புரியாத புதிர், சேரன் பாண்டியன், புது வசந்தம், நான் பேச நினைப்பதெல்லாம், சிகரம் என எக்கச்சக்கமான வெற்றிப் படங்களில் நடித்தார். நடிகர் நாகேஷை பல படங்களில் செதுக்கிய இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அவருடைய மகனையும் அழைத்து ஒரே படத்தில் பண்பட்ட நடிகராக செதுக்கினார். அது தான் வானமே இல்லை திரைப்படம். 



சின்னத்திரை என்ட்ரி :


இருப்பினும் நடனத்தால் அனைவரையும் ஈர்த்த ஆனந்த் பாபுவால் நடிப்பு மூலம் பெரிய அளவில் கவனம் பெற முடியவில்லை. அதனால் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தற்போது சீரியல்களில் தனது நடிப்பு திறமையை வெளியப்படுத்தி வருகிறார். இருப்பினும் மக்கள் இந்த மாபெரும் நடன கலைஞனை ரசிகர்கள் இன்றளவும் மறக்கவில்லை. ஆனந்த் பாபு ஆனந்தமான ஒரு வாழ்க்கையை வாழ மனதார வாழ்த்துவோம்.