நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த விஜய் ஆனந்த் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இயக்குனராகும் விஜய் ஆனந்த்:
தமிழ் சினிமாவில் புதிய புரெடெக்ஷன் நிறுவனமாக அடியெடுத்து வைக்கிறது எஸ்.கே.எம் நிறுவனம். இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு புரொடெக்ஷன் 1 என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை கலைஞர் டி.வியில் ஒளிபரப்பாகிய நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டிய விஜய் ஆனந்த் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படம் வடசென்னை பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் க்ரைம் படமாக உருவாகவுள்ளது. இரண்டாம் உலகம் போரின் கடைசி குண்டு, போத்தனூர் தபால் நிலையம், நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள தென்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆரி ஒளிப்பதிவு செய்கிறார், பி.லெனினிடம் உதவியாளராக பணியாற்றிய ராம் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
நாளைய இயக்குனர் புகழ்:
'SKM சினிமாஸ்' மற்றும் அதன் முதல் படத்திற்கு "புரொடக்ஷன் நம்பர் 1" என்று பெயரிடப்பட்டது, நேற்று (ஆகஸ்ட் 4, 2023) திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் SKM சினிமாஸின் தொடக்க விழா நடந்தது. குறிப்பாக பிரபல சினிமா தயாரிப்பாளார் கலைப்புலி எஸ். தாணு இந்த விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் தயாரிப்பாளரும் நடிகருமான அகில் பேசுகையில், “அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது” என்றார்.
இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்தன் இயக்குகிறார். நாளைய இயக்குநர்கள் போட்டியில் கலந்துக்கொண்டு பாராட்டு பெற்ற விஜய் ஆனந்தன், பல குறும்படங்கள் இயக்கி தன்னை நிரூபித்திருக்கிறார். சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் சினிமாவைக் கற்றுக்கொண்டவர் எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் தன்னை நிரூபித்து, யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது வரிசையில் விஜய் ஆனந்த் இணைவாரா? என்பது படம் வெளியான பின்னர்தான் தெரியவரும். ஏற்கனவே எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம் ‘கெத்து காட்டுற’ என்ற ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது.