தி கோட்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா , லைலா , ஜெயராம் , பிரேம்ஜி ,வைபவ் , மீனாக்க்ஷி செளதரி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தி கோட் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ 126 கோடி வசூலித்தது. முதல்  நான்கு நாட்களில் படம் ரூ 288 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது. ஆரம்பத்தில் உச்சத்திற்கு சென்ற தி கோட் வசூல் அடுத்தடுத்த நாட்களில் சரியத் தொடங்கியது.  முதல் வாரத்தில் 500 கோடி வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக படம்  இதுவரை 318 கோடி வசூலித்துள்ளது.


கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ 


தி கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் காட்சிகள் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டன. விஜயகாந்த் கதாபாத்திரத்திற்கு நடிகர் மணிகண்டன் டப்பிங் பேசியிருந்தார். விஜயகாந்தின் இரு மகன்களான சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் தி கோட் படத்தைப் இன்று பார்த்தனர். படத்தின் முதல் பாகத்தை பார்வையிட்டு அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் . அப்போது பேசிய விஜய பிரபாகரன் ”தி கோட் படத்தை நானும் என்னுடைய சகோதரர் சண்முக பாண்டியனும் பார்த்தோம். பொதுவாக நான் எல்லா படங்களில் வரும் டைட்டில் கார்டையும் கவனிப்பேன். ஆனால் தி கோட் படத்தில் என்னுடைய அப்பா வரும் காட்சியை அப்படியே ஸ்தம்பித்து பார்த்துக் கொண்டே இருந்தேன். படம் வெளியாகி ஒரு வாரம் காலம் ஆகியும் படத்திற்கு இவ்வளவு கூட்டம் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். விஜய் அண்ணன் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர். அதேபோல் வெங்கட் பிரபுவும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் தான். கேப்டன் விஜயகாந்திற்கு ஒரு புகழாரமாக தான் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இதை நாம் அப்படிதான் பார்க்கவேண்டும். கேப்டன் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் ஆகிய இரு தரப்பினரும் இந்த படத்தை வந்து பார்க்கிறார்கள். இது எங்கள் குடும்ப படம் என்றுதான் நான் பார்க்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்