இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி திரைப்படம் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது . இப்படத்தின் திரையரங்க வருகையின் போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் சண்முக பாண்டியன். அப்போது சினிமாவில் சாதி பார்த்து வாய்ப்பளிக்கப்படுவது குறித்து சாதியைப் பற்றிய படங்கள் குறித்தும் அவர் தனது கருத்தை தெரிவித்தார்.
கொம்புசீவி
மறைந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்தைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் செயல்பட்டு வருகிறார். இன்னொரு பக்கம் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் நடிகராக தனக்கான பாதையை வகுத்து வருகிறார். கடந்த ஆண்டு படைத்தலைவன் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு அவர் நடித்த கொம்புசீவி படம் வெளியாகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் , ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சண்முக பாண்டியன் பதிலளித்தார்.
தமிழ் சினிமா சாதி குறித்து சண்முக பாண்டியன்
தமிழ் சினிமாவில் சாதிய அழுத்தம் இருக்கா என்கிற பத்திரிகையாளரின் கேள்விக்கு சண்முகபாண்டியன் இப்படி கூறினார் " எனக்கு தெரிந்து அந்த மாதிரி எதுவும் இல்லை. நான் இதுவரை பார்த்த இடங்களில் அந்த மாதிரி இருந்ததில்லை. ஒரு நடிகருக்கு நல்ல திறமை இருக்கிறது என்றால் சாதி அல்லது மதத்தால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட முடியாது என்று நான் நினைக்கிறேன் "
சாதியைப் பற்றிய படங்கள் குறித்து
அண்மை காலங்களில் சாதியை வைத்து படங்கள் அதிகம் வெளிவருவது குறித்து பேசியபோது " எல்லா சாதி ரீதியிலான படங்களும் தேவைதான். இந்த சாதி மேல் இந்த சாதி கீழ் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்வதற்கு சாதியைப் பற்றிய படங்கள் தேவைதான் . இந்த மாதிரி ஒன்று நடக்கிறது என்பதை வெளியே சொன்னால் தான் அப்படி ஒன்று நடப்பதே வெளியே தெரிகிறது. அதனால் சாதி குறித்த படங்கள் வரவேண்டும் " என்று அவர் கூறினார்.