ரோபோ சங்கருக்கு அஞ்சலி செலுத்திய கமல்
நகைச்சுவை நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞரான ரோபோ சங்கரின் இறப்பு தமிழ் திரையுல்கில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் காமாலை பாதிப்பால் உடல் உறுப்புகள் செயலிழந்து நேற்று இரவு காலமானார் ரோபோ சங்கர். அவரது இறப்புக்கு தென் இந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். சினேகன் , ராதாரவி , ஐஸ்வர்யா லக்ஷ்மி , தனுஷ் , சிவகார்த்திகேயன் , எஸ்.ஏ சந்திரசேகர் , எம்.எஸ் பாஸ்கர் , பாடகர் மனோ இன்னும் பல்வேறு திரைபிரபலங்கள் ரோபோ சங்கரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரோபோ சங்கர் அதிகம் கொண்டாடிய நடிகர் கமல்ஹாசன் அவரது உடலை காண வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தனது வாழ்க்கையில் ரோபோ சங்கர் அதிகம் மதித்த நபர் கமல்ஹாசன்.
கமலை கொண்டாடிய ரோபோ சங்கர்
கமல்ஹாசன் மிகத் தீவிரமான ரசிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். பள்ளி காலத்தில் இருந்தே தான் கமலின் மிகப்பெரிய ரசிகர் என்றும் ஆளவந்தான் படத்தின் போது முதல் நாள் திரையரங்கிற்கு கமலைப் போலவே மொட்டையடித்து தனது அம்மாவிடம் அடிவாங்கியதாகவும் ரோபோ சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்த கமல் ரசிகர் மன்றம் ஒரு விழாவின் போது என்னை அழைத்து ஆளவந்தால் மாதிரி நடிக்க சொன்னார்கள். அப்போது என்னை கமலாகவே நினைத்துக் கொண்டு பால் அபிஷேகம் செய்தார்கள்' என ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
கமலிடம் வந்த முதல் ஃபோன் கால்
சினிமாவில் நடிக்க வந்தபின்னு ரொம்ப நாளாக நான் கமலை பார்க்கவே இல்லை. என் மனைவியிடம் எப்படியாவது அவரை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அப்போது நான் ஞானசம்பந்தன் சாருடன் தான் பழகி வந்தேன். அவரும் கமலும் ரொம்ப நெருக்கமானவர்கள். சகஜமாக இருவரும் ஃபோனில் பேசிக் கொண்டு இருப்பார்கள். அவரிடம் நிறைய முறை கமலை சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படி கேட்டிருக்கிறேன். ஒரு நாள் திடீரென்று என்னிடம் ஃபோனை கொடுத்து பேசச் சொன்னார். எதிர் முனையில் 'ஹலோ நான் கமல்ஹாசன் பேசுறேன்' என்கிற குரல் . எனக்கு பேச்சு வரவில்லை . 'ஞானசம்பந்தன் சார் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நீங்கள் என்னுடைய பெரிய ரசிகர் என்று சொன்னார். ரொம்ப மகிழ்ச்சி ' என்று கமல் சொன்னார். 'நீங்க ஒரு ஏகலைவன். உங்களுக்கு ஏகலைவன் யாருனு தெரியுமா?" என்று கமல் கேட்டார். நால் இல்லை என்றேன் " தன்னுடைய குருவை நேரில் பார்க்காமலே அவரை மனதில் நினைத்து பின்பற்றி வருபவர் தான் ஏகலைவன்' என்று கமல் சொன்னார் " என ரோபோ சங்கர் கமலுடன் பேசிய முதல் தருணத்தை சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.