Robo Shankar Daughter: மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது தந்தை குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

ரோபோ சங்கர் மகள் உருக்கம்:

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த (செப்டம்பர் 18) சென்னை ஜெம் மருத்துவமனையில் உயிரிழந்தார். நகைச்சுவை மட்டும் இன்றி ஆரம்ப காலங்களில் மேடை நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களை சந்தோச படுத்திய ரோபோ சங்கரின் திடீர் மரணம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. சினிமா மட்டும் இன்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைவரிடமும் மிகுந்த அன்போடு பழகக் கூடிய ரோபோ சங்கரின் மரணத்திற்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

அழவச்சுட்டீங்களே அப்பா:

இச்சூழலில் தனது தந்தை ரோபோ சங்கரின் மறைவு குறித்து சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”“அப்பா…நீங்கள் இல்லாமல் 3 நாட்கள் கடந்துவிட்டது. எங்களை நிறைய சிரிக்க வைத்ததும் நீங்க தான். இப்போ நிறைய அழ வைக்கிறதும் நீங்க தான். இந்த 3 நாள் எனக்கு உலகமே தெரியல. நீங்க இல்லாம நம்ம குடும்பத்த எப்படி கொண்டு போக போறோம்னு தெரியல. ஆனா நீங்க எனக்கு சொல்லிக் கொடுத்த மாதிரி கண்டிப்பா நான் ஸ்ட்ராங்கா இருப்பேன் பா. தம்பி இந்த 3 நாள் உங்களை ரொம்ப தேடுறான் பா. கண்டிப்பா நீங்க உங்க நண்பர்கள் மற்றும் அண்ணன்களோட மேல சந்தோஷமா தான் இருப்பீங்க.

நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி விமர்சனங்களுக்கு பயப்பட மாட்டேன் பா. கண்டிப்பா உங்களோட பொண்ணுங்குற பேர காப்பாத்துவேன். உங்களை பெருமைப்பட வைப்பேன். லவ் யூ.. மிஸ் யூ அப்பா.. உங்களுக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்ச போட்டோ இது. எல்லோருமே இந்த போட்டோ பாத்துட்டு அப்படியே உங்க அப்பா மாதிரியே இருக்கன்னு சொல்லுவாங்க. நான் எப்போதும் உங்கள மாதிரியே இருப்பேன் அப்பா..என்று கூறியுள்ளார். தற்போது இந்திரஜாவிற்கு பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.