நடிகர் ராஜேஷ் மறைவு

சினிமா , சீரியல் என பன்முகத் தன்மையோடு வலம் வந்தவர் நடிகர் ராஜேஷ். இன்று காலை இவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949- ஆம் ஆண்டு பிறந்தவர் ராஜேஷ். கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவரது உண்மையான பெயர் வில்லியம்ஸ்.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரையும் ராஜேஷ் என மாற்றி கொண்டார்.

தொடர்ந்து, இயக்குனர் பாலகுரு இயக்கத்தில் வெளியான 'கன்னி பருவத்திலே' படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். பின்னர் தாய் மனம், தை பொங்கல், நான் நானேதான், அந்த 7 நாட்கள், உட்பட பல படங்களில் நடித்தார். இவர் ஹீரோவாக நடித்த படங்கள் மிகவும் குறைவு என்றாலும், 400-கும் மேற்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார் ராஜேஷ். அதே போல் சில படங்களுக்கு டப்பிங் செய்துள்ள ராஜேஷ்... ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நிறைவடைந்த 'கார்த்திகை தீபம்' சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் ஹீரோயினின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். 

ஜோசியத்தின் மீது ஆர்வம்

சினிமாவை தாண்டி ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் ராஜேஷ் சிறந்து விளங்கினார். ஹாலிவுட் நடிகர்களின் பயோகிராபிகளை எழுதும் எழுத்தாளராகவும் செயல்பட்டார். கிறிஸ்துவரான இவர் பெரியார் கொள்கைகளை பின்பற்றவராக செயல்பட்டு, கடைசி காலங்களில் ஜோதிடம் தொடர்பாக தீவிரமாக எழுதி வந்தார். ஜோதிடத்தின் மீது மிகத் தீவிரமாக ஆர்வம் கொண்டிருந்தவர் ராஜேஷ். தான் ஜோதிடம் பார்ப்பதில்லை என்றாலும் பல முக்கியமான நடிகர்களின் ஜாதகத்தைக் பிரபல ஜோதிடர்களிடம் கொடுத்து அவர்களை டெஸ்ட் செய்யும் வழக்கத்தை செய்துவந்தார். 

அந்த வகையில் பிரபல ஜோதிடர் ஒருவரிடம் நடிகை ஶ்ரீதேவியின் ஜாதகத்தை கொடுத்து அது தன்னுடைய அக்கா மகள் ஜாதகம் என்று பொய் சொல்லியிருக்கிறார் ராஜேஷ். அந்த ஜாதகத்தை பார்த்து அது ஶ்ரீதேவியின் ஜாதகம் என்று ஜோதிடர் கண்டுபிடித்துவிட்டார். உடனே அவர் காலில் விழுந்து உண்மையை ஒத்துக் கொண்டதாக ராஜேஷ் சார் வித் சித்ரா நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளார். ஜோதிடம் பார்ப்பதை தான் விட்டுவிட்டாலும் அதில் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்