வளையல் கடை வைத்திருந்தவரை தூக்கிட்டு போய் ஸ்டாராக்கிய பாரதிராஜா...நடிகர் பாண்டியன் ஹீரோவான கதை
மதுரையில் கோவில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த நடிகர் பாண்டியன் கோலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டாரான கதை தெரியுமா

நடிகர் பாண்டியன்
1990 களில் தமிழ் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாண்டியன். 1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய மண் வாசனை படத்தில் நாயகனாக அறிமுகமான பாண்டியன் பெண்கள் மத்தியில் தனது நிறத்திற்காக பிரபலமடைந்தார். அடுத்தடுத்த படங்கள் பெரிய வெற்றிகளை கொடுக்க கமல் , விஜயகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் அளவிற்கு செம பிஸியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர். நாயகனாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த பின் துணை கதாபாத்திரங்கள் , வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். பின் ஆஇஅதிமுக கட்சியில் சேர்ந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு லிவர் கோளாறு ஏற்பட்டு உயிரிழ்ந்தார். மதுரையில் கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த நடிகர் பாண்டியன் இவ்வளவு பெரிய ஸ்டார் ஆன கதையை அவரது மகன் ரகு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார்
கைகளை பார்த்து கண்டுபிடித்த பாரதிராஜா
" மதுரை ஜெயராஜ நாடார் ஸ்கூலில் தான் அப்பா படித்தார். 12 ஆவது முடித்து போலீஸ் டிரெயினிங் சென்றார். அதே நேரத்தில் மதுரையில் கோயிலில் வளையல் கடை வைத்திருந்தார். வரவு செலவு பார்க்க வாராவாரம் கோயிலுக்கு செல்வார். அந்த கோயிலுக்கு நிறைய பெரிய ஸ்டார்கள் எல்லாம் வருவார்கள். அப்போது ஒரு முறை கோயிலில் கூட்டமாக இருந்திருக்கிறது. பாரதிராஜா வந்திருக்கிறார் என்று சொன்னார்கள். உடனே அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க அப்பா போனார். அப்போது கூட்டத்தின் அப்பாவின் கையை பார்த்ததும் இந்த கை மட்டும் வித்தியாசமாக இருக்கிறது என பாரதிராஜா அப்பாவை பார்த்தார். நீ யார் இந்த ஊர்க்காரனா , சைனா காரனா என பாரதிராஜா அப்பாவிடம் கேட்டார். பின் என்கூட வா என்று அப்பாவை கூப்பிட்டார். ஆனால் பாரதிராஜாவுடன் வந்த தயாரிப்பாளர் அப்பாவை காரில் ஏற்ற மறுத்துவிட்டார். பின் பக்கத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஒரு சீன் நடித்து காட்ட சொல்லியிருக்கிறார். 16 வயதினிலே படத்தில் கமல் பேசும் 'ஆத்தா கோழி வளத்தா நாய் மட்டும் வளக்கல' டயலாக்கை அப்பா பேசி காட்டினார்.அதை பார்த்த பாரதிராஜா அப்பாவின் நடிப்பு நன்றாக இருப்பதாக சொன்னார். பின் அவரை தேனிக்கு வர சொல்லிவிட்டு போய்விட்டார். வீட்டில் பணம் வாங்கிவிட்டு அப்பா தேனிக்கு போனார்.
மண்வாசனை படத்திற்கான நடிகர் தேர்வு செய்துகொண்டிருக்கிறார்கள். ஹீயோயினாக ரேவதி செலக்ட் பண்ணிட்டாங்க .ஹீரோதான் கிடைக்கல. அப்போதான் என்னுடைய அப்பாவை பார்த்தார் பாரதிராஜா. மண்வாசனை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. மண் வாசனை படத்தில் அப்பா ரேவதியை கயிறு கட்டி மரத்தில் தூக்கும் காட்சியை பார்த்ததும் எல்லாருக்கும் பிடித்துவிட்டது. பெண்களுக்கு அப்பாவை நிறைய பிடித்தது. கமல் விஜயகாந்தைத் தொடர்ந்து செம பிஸியான ஒரு நடிகராக அப்பா இருந்தார். "