Daniel Balaji : மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் இறந்து விடுவேன் என நினைத்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மறைந்த நடிகர் முரளியின் தம்பியும், பிரபல நடிகருமான டேனியல் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். 48 வயதான அவரின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தொடங்கி பல நடிகர்களின் படங்களிலும் வில்லன் மற்றும் முக்கியமான கேரக்டரில் டேனியல் பாலாஜி நடித்திருந்தார். சில சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். 


இவர் நேர்காணல் ஒன்றில், 2 ஆண்டுகளுக்கு முன் தான் மரணத்தில் இருந்து தப்பி பிழைத்த கதையை பகிர்ந்திருந்தார். அதில் பேசிய டேனியல் பாலாஜி, “கொரோனா தொற்றின் முதல் சீசன் என்பது மிகவும் ஜாலியாக இருந்தது. காரணம் எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. நான் தனியாகவே வாழ்ந்து பழகுனவன் என்பதால் பெரிதாக தெரியவில்லை. ஆனால் கொரோனாவின் 2வது சீசன் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. காரணம் நான் ஒரு தெலுங்கு படம் ஷூட் முடிச்சிட்டு, தமிழ் படம் ஒன்றில் கமிட்டாகி இருந்தேன். மிகவும் எச்சரிக்கையாக இருந்தும் கொரோனா பாதித்து விட்டது.


ஒரு கட்டத்தில் முடியாமல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விட்டேன். நான் ஒரு 3,4 நாட்களில் வீடு திரும்பி விடுவேன் என நினைத்தபோது, மருத்துவர்கள் நான் இறந்து விடுவேன் என நினைத்தார்கள். ஆனால் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. மருத்துவமனையில் துணைக்கு யாராவது இருக்கிறார்களா என கேட்டபோது என்னுடைய போன் நம்பர் கொடுத்து விட்டேன். சிகிச்சை பற்றி கேட்க எனக்கே போன் செய்து மருத்துவமனையினர் பதில் கேட்பார்கள். 


4-வது நாளில் நான் இறந்து விடுவேன் என்ற அளவுக்கு நிலை சென்று விட்டது. ஆனால் நான் அதிர்ஷ்டவசமாக தப்பித்து விட்டேன். நான் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னால் ஏரியாவில் இருக்கும் பையன் ஒருவனிடம் தினமும் காலையில் வந்து என் வீட்டை தட்டிப்பார், திறக்கவில்லை என்றால் திறந்து பார் என சொல்லி சாவி கொடுத்திருந்தேன். அந்த அளவுக்கு என்னுடைய கண்டிஷன் இருந்தது. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா இவங்களுக்கு போன் பண்ணி விஷயம் சொல்லு என கூறி நம்பர் எல்லாம் கொடுத்தேன். 


பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று இருக்கத்தான் செய்யும். தினமும் வீட்டில் இருக்கும்போதெல்லாம் என்னை சுற்றி ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. நான் பொதுவாகவே அமைதியான பையன். அந்த கொரோனா பாதிப்பு இன்னும் ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி விட்டது” என கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.