’லால் சிங் சத்தா’ திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதலை மையமாகக் கொண்ட ‘லால் சிங் சத்தா’ என்னும் இந்தி திரைப்படம் கடந்த 11–ந்தேதி வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் திருட்டுத்தனாக இணையதளங்களில் வெளிவருவது குறித்து வயாகாம் 18 நிறுவனம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகாரின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சிலரை கடந்த 12–ந்தேதி கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள சினிபோலிஸ், ஓரியண்ட் மாலில் இருந்து வயாகாம்18 நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். விசாரணையின் போது இந்த படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இதுபோன்ற திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக ஒரு குழு அமைத்து அவர்கள் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் பிரைம் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்வதோடு, அவற்றை விநியோகிப்பதிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வழக்கறிஞர் அனில் லாலே
இது குறித்து வயாகாம்18 நிறுவனத்தின் வழக்கறிஞர்அனில் லாலே கூறுகையில், திருட்டுத்தனமாக திரைப்படங்களை பதிவேற்றம் செய்வதற்கு எதிரான போராட்டத்தில் வயாகாம்18 தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பாக அத்துடன், திருட்டுத்தனமாக திரைப்படங்களை வெளியிடாத நிலையை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சியைத் நாங்கள் தொடருவோம். இது போன்ற அத்துமீறலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம் ஆகும்.
நாங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறோம். அத்துடன் இவ்வாறு செய்கையில் திரைப்படத்துறையை சார்ந்த அனைத்து தரப்பினரும் நிம்மதியாக இருக்க அது வழிவகுக்கும் என்று தெரிவித்தார். திருட்டுத்தனமாக திரைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்காக சமீபத்தில் வயாகாம்18 நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறிப்பிட்ட வலைதளங்கள் மற்றும் இணைப்புகள், குறிப்பிட்ட கேபிள் ஆபரேட்டர்கள், இணைய சேவை வழங்குனர்கள் மற்றும் முகம் தெரியாத நபர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தடை ஆணையை பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது "லால் சிங் சத்தா" திரைப்படத்தை முறைகேடாக வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படத்தயாரிப்பாளர்களின் முறையான அனுமதி இல்லாமல் எந்த வகையிலும் படத்தை நகலெடுப்பது, பதிவுசெய்தல், மறுஉருவாக்கம் செய்தல், வினியோகம் செய்தல் அல்லது பதிவிறக்கம் செய்தல் ஆகியவை சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.