ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் அவர் இதுவரை நடித்துள்ள இஸ்லாமிய பெயர்கள் கொண்ட கேரக்டர்களின் படங்களை பற்றி காணலாம்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் “லால் சலாம்”. 3, வை ராஜா வை படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா படத்தை இயக்கியுள்ளார். லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் நாளை (பிப்ரவரி 9) தியேட்டரில் வெளியாகிறது.
இப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதேபோல் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்வும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இஸ்லாமிய கேரக்டரில் ரஜினி நடித்துள்ள மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியது. ஆனாலும் பாட்ஷா மாதிரியான கேரக்டரில் ரஜினி இப்படத்தில் இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஜினி தனது சினிமா கேரியரில் இதுவரை நடித்துள்ள இஸ்லாமிய பெயர் கொண்ட கேரக்டரின் படங்கள் பற்றி காணலாம்.
- 1979 ஆம் ஆண்டு இயக்குநர் ஐ.வி.சசி இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெமினி கணேசன், ஸ்ரீ பிருயா, ஜெயபாரதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் நடித்த “அலாவுதீனும் அற்புத விளக்கும்” படம் வெளியானது. தேவராஜன் இசையமைத்த இந்த படத்தில் “கம்ருதீன்” என்ற கேரக்டரில் ரஜினி நடித்திருந்தார்.
- 1985 ஆம் ஆண்டு இந்தியில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், மாதவி, பூனம் தில்லோன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “GERAFTAAR" என்ற படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினி இன்ஸ்பெக்டர் ஹூசைன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
- 1989 ஆம் ஆண்டு பிரயாக் ராஜ் இயக்கித்தில் கைர் கானூனி என்ற படம் வெளியானது.இந்த படத்தில் கிமி கட்கர் , ஷஷி கபூர் , ரஞ்சித் மற்றும் காதர் கான் என பலரும் நடித்திருந்தனர். இதில் ஆசம் கான்,அக்பர் கான் என்ற இரண்டு கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
- அதே 1989 ஆம் ஆண்டு இந்தியில் ரமேஷ் சிப்பி இயக்கிய பிரஷ்டாச்சார் படத்தில் மிதுன் சக்ரவர்த்தி , ரேகா , அனுபம் கெர், ராசா முராத் மற்றும் அபினவ் சதுர்வேதி ஆகியோருடன் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் ‘அப்துல் சத்தார்’ என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
- 1993 ஆம் ஆண்டு கே.சி.பொகாடியா இயக்கத்தில் உருவான படம் ‘இன்சானியத் கே தேவ்தா. இப்படத்தில் ரஜினிகாந்த் , ராஜ் குமார் , மனிஷா கொய்ராலா மற்றும் வினோத் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர் . இதில் அன்வர் என்ற இஸ்லாமிய இளைஞராக ரஜினி நடித்திருந்தார்.
- 1995 ஆம் ஆண்டு பாட்ஷா படம் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியானது. இதில் மாணிக்கம் என்ற கேரக்டரில் நடித்திருந்தாலும், தனது இஸ்லாமிய நண்பரின் நியாபகமாக “மாணிக் பாட்ஷா” என பெயரை வைத்திருப்பார்.