ஒரே காட்சிக்கும் மட்டும் 10 கேமராக்கள் வைத்து ஷூட் செய்து எல்லாம் காணாமல் போனதை சமாளிக்க முடியவில்லை என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.


லால் சலாம்


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் லால் சலாம். விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். விக்ராந்த், செந்தில் , கபில் தேவ் , தன்யா பால்கிருஷ்ணன் , அனந்திகா சனில் குமார், விவேக் பிரசன்னா , தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார்.


ரிலீஸ் தள்ளிப்போன காரணம்






லால் சலாம் படம் முதலில் ஜனவரி மாதம் வெளியாக இருந்தது. கடைசி நேரத்தில் இப்படத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் இருந்த ஹார்ட் டிஸ்க் தொலைந்துபோனதால் இந்த தாமதம் என்று தெரிவிக்கப்பட்டது. திரையரங்களில் ரஜினி ரசிகர்களால் கொண்டாட்டத்துடன் வரவேற்கப்பட்ட லால் சலாம் படம் சுமாரான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தில் பலவித குறைபாடுகள் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தார்கள். லால் சலாம் படம் ரிலீஸுக்கு இறுதி நேரத்தில் இந்த ஹார்ட் டிஸ்க் தொலைந்துபோனதே படம் முழுமையடையாமல் வெளியிட்டதற்கு காரணம் என்று படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விளக்கமளித்த அவர் இப்படி கூறியுள்ளார்.


10 கேமரா வெச்சு ஷூட் பண்ணோம்


லால் சலாம் படப்பிடிப்பில் ஒரு நாளைக்கு சராசரியாக 500 ஜூனியர் ஆர்டிஸ்ட் செட்டில் இருப்பார்கள். படக்குழு எங்களை எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு சுமார் 2000 பேர் வரை செட்டில் இருப்போம். படத்தில் கிரிக்கெட் விளையாடும் காட்சி ஒன்றை எடுத்தோம். இவ்வளவு பேரை வைத்துக் கொண்டு அதிக நாட்கள் எடுப்பதற்கான பட்ஜெட் எங்களிடம் இல்லை என்பதால் 2 நாட்களில் இந்த காட்சியை எடுக்க திட்டமிட்டோம். கிரிக்கெட் விளையாட்டை படம்பிடிக்க நானும் ஒளிப்பதிவாளரும் பேசி கேமரா எங்கெல்லாம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரே நேரத்தில் பத்து கோணத்தில் கேமராக்கள் வைத்து இந்த காட்சியை இரண்டு நாட்களில் எடுத்து முடித்தோம்.” 


21 நாள் ஃபுட்டேஜ் தொலைந்துவிட்டது..


எங்கள் மோசமான கவனக்குறைவால் நாங்கள் 21 நாட்கள் எடுத்த காட்சிகள் இருந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது. இந்தப் படத்திற்காக விஷ்ணு விஷால்  ஒரு வருடம் தாடி வளர்த்தார். படப்பிடிப்பு முடிந்ததும் அவர் அடுத்த படத்திற்காக கெட் அப் மாறிவிட்டார். அதேபோல் மொய்தீன் பாயாக நடித்த அப்பாவும் படத்திற்கு கெட் அப் மாற்றிவிட்டார். நாங்கள் மீண்டும் ஒரு சில காட்சிகளை எடுக்க வேண்டும் என்றாலும் மீண்டும் லோகேஷனுக்கு அனுமதி வாங்க வேண்டும் , படக்குழு , ஜூனியர் ஆர்டிஸ்ட் எல்லாரையும் ஒன்று சேர்க்க வேண்டும் . அது எல்லாம் சாத்தியமற்றதாக தோன்றியது. இந்த விஷயத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அப்பா ரொம்ப ஆதரவா இருந்தாங்க.


விஷ்ணு விஷாலுக்கு தாடிக்கு விக் ரெடி செய்தோம். அப்பாவும் கடைசி நேரத்தில் கைவிடக்கூடாது என்று நடித்து கொடுத்தார். எங்களுக்கு இருந்த நேரத்தில் எங்களால் முடிந்த அளவு காட்சிகளை எடுத்து அதை வைத்து படத்தை மீண்டும் எடிட் செய்தோம்” என்று அவர் கூறியுள்ளார்.