அனிருத்தின் பெற்றோர்கள் அவரை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்ப இருந்ததாகவும், தனுஷ்தான் அவர்களிடம் பேசி அவரை இசையமைப்பாளராக மாற்றியதாக லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கொலைவெறி பாய்ஸ்
தனுஷ் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதில் வெற்றிமாறன் தனுஷ் வீட்டிற்கு சென்றபோது, ஒரு சின்ன பையன் பின்னால் உட்கார்ந்து பியானோ வாசித்துக்கொண்டு இருந்ததாகவும் அந்த பையனை பார்த்து தனுஷ் “ நம்ம பையன்தான் செம டேலண்ட். பெரிய ஆளா வருவான்” என்று தன்னிடம் சொன்னதாக அவர் கூறினார். அவர் சொன்னது போலவே அனிருத் இன்று ராக்ஸ்ட்ராக வளர்ந்து நிற்கிறார்.
அனிருத்தை சினிமாவில் தனுஷ் 3 படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே அனிருத் இசையமைத்த கொலவெறி பாடல் அவரை உலகம் முழுவதும் அடையாளம் காட்டியது. அனிருத் இசையமைப்பாளராக மாறுவதற்கு முக்கிய காரணமாக தனுஷ் இருந்ததாக, அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அனிருத்தை அவரது பெற்றோர்கள் படிப்புக்கு வெளிநாட்டிற்கு அனுப்ப இருந்ததாகவும், தனுஷ்தான் அவர்களிடம் பேசி அவரை இங்கேயே இருக்க வைத்ததாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். மேலும் அனிருத்துக்கு தனுஷ் கீபோர்டு வாங்கிக் கொடுத்ததாகவும் 3 படத்தில் அவரை இசையமைப்பாளராக போடச் சொன்னதும் தனுஷ்தான் என்று அவர் தெரிவித்தார். இதற்கு பிறகு அனிருத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு முழுக்க முழுக்க அனிருத்தின் திறமையும் உழைப்புமேதான் காரணம் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
ராயன்
தனுஷ் தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராமன், செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா , பிரகாஷ்ராஜ், சரவணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் குபேரன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்