சனாதானம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றி நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைத்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. மு.க.ஸ்டாலின் ஜெயிக்காத நிலையில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் நேற்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், “மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது. அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில் உதயநிதி பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சட்டமன்றத்தில் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு என்னை உண்மையாகவே கவர்ந்தது. அதை உடனே பாராட்டிப் பதிவிட வேண்டும் என்ற எண்ணமும் வந்தது. ஆனால் சனாதானம் குறித்து வந்த விவாதம் என்னை சற்றே நிறுத்தி யோசிக்க வைத்தது . ஏனெனில் மதம், அடையாளம், சமூக அமைப்பு போன்ற விஷயங்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை. மிக விரைவில் பிளவுபடுத்தும் விவாதங்களாக மாறிவிடும்.தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது, இந்துத்துவம் என்ற நம்பிக்கையையோ மதத்தையோ புறக்கணிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று நான் நினைக்கவில்லை.
நான் புரிந்துகொண்ட வரையில் விமர்சனம் சமூக அடுக்கு முறை, மனிதர்களை வகைப்படுத்தும் அமைப்புகள் போன்றவற்றை நோக்கியது என்றாலும் காலப்போக்கில் அவை நடைமுறையில் சமத்துவமின்மை, ஒதுக்கல், மற்றும் ஒடுக்குமுறைக்கு காரணமாகி விட்டன. அதில் பல விஷயங்கள் தவறான விளக்கங்களாலும் தலைமுறை தலைமுறையாக ஏற்பட்ட தவறான பயன்பாட்டாலும் உருவானதாக இருந்தாலும், மனிதர்களுக்கிடையே மரியாதையின்மையையோ சமத்துவமின்மையையோ நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் மரபுகள், சொற்கள், மற்றும் அமைப்புகளை நாம் அனைவரும் இணைந்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்று தோன்றுகிறது.
எந்த தத்துவமோ அமைப்போ இருந்தாலும், அது மனிதநேயம், கண்ணியம், கருணை, மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை மையமாக கொண்டு வளர வேண்டும்.என் புரிதலின்படி, இந்து மதத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று கேள்வி கேட்கும் இடம், மறுபரிசீலனை செய்யும் திறன், விவாதிக்கும் சுதந்திரம், மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு இடமளிப்பதுதான்.
அதேபோல், தமிழ் தாய் வாழ்த்து குறித்து நடைபெறும் விவாதத்தையும் நான் கவனித்து வருகிறேன். அது எந்த வரிசையில் இசைக்கப்படுகிறது என்பதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை உண்மையாகவே புரிந்துகொள்ள முயற்சித்து வருகிறேன். இதற்குப் பின்னால் வரலாற்று, அரசியல், மற்றும் உணர்ச்சி சார்ந்த காரணங்கள் இருக்கலாம். அவை பலருக்கும் முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம்.அதனால், அதன் முழுப் பின்னணி, உணர்வுகள், மற்றும் வரலாற்றை புரிந்துகொள்ளாமல் உடனடியாக ஒரு கடுமையான நிலைப்பாடு எடுக்கவோ கருத்து சொல்லவோ நான் விரும்பவில்லை” என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
