குஷி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
காதல் படம்
விஜய் தேவரகொண்டா, சமந்தா இரண்டாவது முறையாக பெரும் எதிர்ப்பார்ப்புகளிடையே இணைந்த திரைப்படம் குஷி. ஷிவ நிர்வாணா இயக்கத்தில் கடந்த செப்டெம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், சுமார் 50 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 70 கோடிகள் வரை வசூலித்ததாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.
சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா, ரோஹிணி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். அதன்படி மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்துக்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
பாக்ஸ் ஆஃபிஸில் எப்படி?
காஷ்மீரில் தொடங்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், பெற்றோரை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதி, அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், ப்ராக்டிக்கல் திருமண வாழ்வில் வரும் பிரச்னைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்க்ப்பட்டு இளம் தலைமுறையினரிடம் வரவேற்பு பெற்றது.
குறிப்பாக முதல் வாரத்திலே இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. முதல் மூன்று நாள்களில் உலக அளவில் 70.23 கோடிகளை வசூலித்ததாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 7 கோடிகளை வசூலித்து, தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த தெலுங்கு படமாக இப்படம் உருவெடுத்ததாக படக்குழு அறிவித்தது. ஆனால் அதன்பின் பாக்ஸ் ஆஃபிஸில் படத்தின் வசூல் மெல்ல சரியத் தொடங்கியது.
ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்
இந்நிலையில் குஷி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி குஷி திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குஷி திரைப்படம் அக்டோபர் 6ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஓடிடி வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்கூட்டியே படம் வெளியாவதை ஒட்டி சமந்தா - விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
அடுத்தடுத்த ப்ராஜெக்ட்கள்
முன்னதாக குஷி படத்தின் ப்ரொமோஷன் பணிகளின் போது விஜய் தேவரகொண்டா - சமந்தா இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளியது.
இருவரும் காதலில் விழுந்தார்களா என்றெல்லாம் ரசிகர்கள் அங்கலாய்த்து வந்த நிலையில், மற்றொருபுறம் விஜய் தேவரகொண்டா விரைவில் நடிகை ராஷ்மிகாவை திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. நடிகை சமந்தா இன்னொருபுறம் ஆன்மீகப் பாதையில் பயணித்து வருவதுடன் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.
விரைவில் சமந்தா நடித்துள்ள ‘சீட்டடல் இந்தியா‘ இணைய தொடர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.