விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு குஷி படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.
2011ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் கால் பதித்து, நடிகர் நானியுடன் நடித்த ’எவடே சுப்பிரமணியம்’ படத்தின் மூலம் ரசிகர்களைப் பெற்று டோலிவுட்டில் படிப்படியாக வளர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
தொடர்ந்து அர்ஜூன் ரெட்டி, மகாநடி, கீத கோவிந்தம், டியர் காம்ரேட் என ஹிட் படங்களைக் கொடுத்த விஜய் தேவரகொண்டா லைகர் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார். இந்நிலையில், மகாநடி படத்துக்குப் பிறகு சமந்தாவுடன் விஜய் தேவரகொண்டா ‘குஷி’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் செப்டெம்பர் 1ஆம் தேதி வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. ரொமாண்டிக் காமெடியாகத் தயாராகி வரும் இந்தப் படத்தில் சச்சின் கெதெக்கர், ரோஹினி, ராகுல் ராமக்ருஷ்ணா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிவ நிர்வாணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காஷ்மீரில் முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், ஹைதராபாத், அலப்பி, விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ந்தது.
மேலும் நடிகை சமந்தா படப்பிடிப்பின் இடையே மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பு பல தருணங்களில் தடைபட்டது. தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுவென பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு குஷி படத்தின் ‘என் ரோஜா நீயே’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.
மலையாள ’ஹிருதயம்’ படத்துக்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், ஏற்கெனவே இந்தப் படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்புகள் எகிறின. இந்நிலையில், ’என் ரோஜா நீயே’ எனும் இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் சமந்தா காஷ்மீர் இஸ்லாமிய பெண்ணாகத் தோன்றும் காட்சிகளும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளன.
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தில் சமந்தா இஸ்லாமியப் பெண்ணாக நடித்துள்ள நிலையில், மதம் தாண்டிய காதலை மையப்படுத்தி இந்தப் படம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமந்தா - விஜய் தேவரகொண்டா இடையே இந்தப் பாடலில் அமைந்துள்ள கெமிஸ்ட்ரியும் ரசிகர்களைக் கவர்ந்து உடனடியாக இந்தப் பாடல் ஹிட் அடித்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Radhika on Manobala : பல தசாப்தங்களாக தொடர்ந்த நட்பு... மனோபாலா இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... ராதிகா உருக்கமான ட்வீட் !