90ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த குஷ்பூ தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வருவதுடன் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஒரு நடிகையாக கலக்கி வரும் குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது பா.ஜ.கவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார். 


 



சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ, சமூகத்தில் நடைபெறும் பல பிரச்சினைகள் குறித்து தன்னுடைய கருத்தை துணிச்சலாக தெரிவித்து பதிவை போஸ்ட் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 


அந்த வகையில் பா.ஜ.க அரசு குறித்து குஷ்பூவின் பழைய பதிவு ஒன்றை ரசிகர் எடுத்து போஸ்ட் செய்து இருந்தார். அந்த பதிவுக்கு குஷ்பூ தற்போது பதிலளித்துள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.     


"நான் ஒரு முஸ்லீமாக பிறந்தேன். இறங்கும் போதும் முஸ்லீமாகவே இறப்பேன். ஒரு போதும் அதை நான் மாற்ற மாட்டேன். அது எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் மதத்தை சார்ந்த ஆட்சியில் வாழாதவள். இரக்கம், மனிதாபிமானம், அனைவருக்கும் சம உரிமை, பெண்களின் உரிமை, நல்லிணக்கம், பன்முகத்தன்மை மற்றும் மகிழ்ச்சியின் அடிப்படையில் வாழ்கிறேன். பா.ஜ.கவுக்கு வெவ்வேறு விதிகள் உள்ளன என நினைக்கிறேன்" என முந்தைய பதிவில் போஸ்ட் செய்துள்ளார் நடிகை குஷ்பூ.


 



குஷ்பூவின் இந்த பதிவை தற்போது போஸ்ட் செய்துள்ள ரசிகருக்கு குஷ்பூ ட்விட்டர் பதிவு மூலம் பதில் அளித்துள்ளார். "நான்  சாகும் வரை முஸ்லீம் தான் சகோதரரே. நான் மதம் மாறவும் இல்லை. மாறவும் மாட்டேன். மற்றவர்களை பொறுத்தவரையில் மதம் என்பது ஆன்மீகம் சார்ந்தது. ஆனால் எனக்கு அப்படியில்லை. என்னை பொறுத்தவரையில் ஆன்மிகம் என்பது ஒருமைப்பாடு நிலை பற்றியது. கடவுள் ஒருவர் தான் என்பதை நான் நம்புகிறேன். அனைவராலும் வணங்கப்படும் கடவுள் ராமர். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்தி பார்க்கும் போது நன்றாக உணர்வீர்கள்" என பதிலளித்துள்ளார். குஷ்பூவின் இந்த போஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. 


கடந்த ஜனவரி 22ம் தேதி உத்திர பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு குஷ்பூவுக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால் அவரால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என்பதை தெரிவித்து பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் ராமரை பார்க்க இருக்கிறோம் என்பதை நினைக்கையில் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.