படையப்பா இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், சௌந்தர்யா, செந்தில் மற்றும் பல நடிகர்கள் நடித்து பெரும் ஹிட் அடித்த திரைப்படம் ஆகும். பி எல் தென்னப்பன் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான இந்த படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. படையப்பா ரஜினியின் திரை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மிக முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று என்று கூறலாம். என்றும் நினைவிலிருந்து அழியாதிருக்கக்கூடிய முக்கியப் படமாக இருக்கும் காரணம் அதன் திரைக்கதை.
நீளமான படம்
இந்தப்படம் குறித்து ஒரு சமீபத்திய நேர்காணலில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்து இருந்தார். படையப்பா திரைப்படத்தின் கதையில் மூன்று தலைமுறைகள் காட்டப்படுவதால், அந்த படம் கடைசியாக எடிட் செய்து பார்க்கையில் சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு மேல் இருந்துள்ளது. படம் பார்த்த ரஜினி இரண்டு இன்டர்வெல் விடுவதுபற்றி யோசித்ததாக கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்தார்.
இரண்டு இன்டர்வெல்
அதுகுறித்து அவர் பேசுகையில், "ப்ரிவ்யூ பார்த்து முடித்து, ரஜினி என்னிடம் வந்து படம் ரொம்ப நல்லாருக்கு ஆனா ரொம்ப நேரம் போற மாதிரி இருக்கேன்னு சொல்றார். நான் டைம் பாக்க சொன்னார். மூன்றரை மணி நேரம் ஓடி இருந்தது. மொத்தம் 19 ரீல்கள் ஓடின. அப்போது ரஜினி ரெண்டு இன்டர்வெல் விட்டு படம் வெளியிடலாமேன்னு சொன்னார். அப்போது ஹிந்தியில் கூட ஒரு திரைப்படத்திற்கு ரெண்டு இன்டர்வெல் வந்ததாக சொன்னார்." என்று கூறினார்.
கமலுடன் ஆலோசனை
மேலும் பேசிய அவர், "அது குறித்து கமல்ஹாசனிடம் நடத்திய ஆலோசனையில் அவர் அது வேண்டாம், தமிழுக்கு செட் ஆகாது என்று கூறி, நீங்கள் அதனை இயக்குனர் கையில் விட்டுவிடுங்கள், அவருக்கு தெரியும். நீங்கள் நடித்ததனால் எல்லா சீன்களும் நல்ல சீன்களாக தெரியும், நீங்கள் தலையிடாதீர்கள் என்று கூறி அனுப்பி உள்ளார். அதே போல ரஜினி என்னிடம் எடிட் செய்ய சொல்லிவிட்டு எந்த காட்சி என்பதை கூட கேட்டுக்கொள்ளவில்லை." என்றார்.
காட்சிகள் நீக்கம்
பிறகு அந்தப் படம் பெருமளவில் சுருக்கப்பட்டதையும், எந்தந்த காட்சிகள் நீக்கப்பட்டது என்றும் கூறினார். இன்றைக்கு ஒருசில படங்களில், நீக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த பிறகுதான், சில கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும், சில காட்சிகளுக்கான காரணங்களும் புரிகின்றன. ஆனால், அத்தனைக் காட்சிகள் நீக்கப்பட்டும் படையப்பா எவ்வித சிதைவும் இல்லாமல் இந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அதிலிருந்தே அதன் திரைக்கதை வலிமையை உணரலாம். இதற்கானப் முழு பெயரும் கே.எஸ். ரவிக்குமாரையே சேரும்.
டெலிட்டட் சீன்ஸ்
நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து பேசுகையில் "முழு காட்சிகளா ஒரு 3 சீன் டெலிட் பண்ணிருப்போம், டப்பிங் போனதுக்கு அப்புறம் கட் பண்ணோம். செந்திலை வைத்து ஒரு காமெடி ஸீன் இருந்தது, சித்தாராவை பொண்ணு கேட்க வரும் ஸீன் ஒன்று இருந்தது, துண்டு தவறினதுக்கு அப்புறம் முருகர் கோயில் ஒண்ணுல ரஜினி தனியா அநாதயா படுத்துருக்குற மாதிரி ஒரு சீன் இருந்தது, நல்ல லைட்டிங் எல்லாம் வச்சு, வேற வேற ஆங்கிள்ல அருமையா பண்ணிருந்தோம். இது மூனையும் நான்தான் வேண்டாம்ன்னு கட் பண்ண சொல்லிட்டேன். அதை கட் பண்ணின பிறகும் கதையின் ஓட்டம் மாறுபடல, அதனால படம் ஒருவழியா நல்லபடியா வந்தது. அப்போ நாங்க ஆவிட்ல எடிட் பண்ணிருந்தா டெலிட்டட் ஸின்ஸ்ன்னு சொல்லி ரிலீஸ் பண்ணிருக்கலாம்." என்று பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்