தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணியான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நான்காவது முறையாக கே.எஸ்.ரவிக்குமாருடன் கூட்டணி சேர்ந்த திரைப்படம் 'நட்புக்காக'. விஜயகுமார், சிம்ரன், மனோரமா, சித்தாரா, சுஜாதா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், ரஞ்சித், செந்தில், அனுமோகன், மாஸ்டர் மகேந்திரன் என மிக பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்த இப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
அப்பா மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்த இப்படம் நட்புக்கு ஒரு இலக்கணமாக வெளியான தமிழ் படங்களின் வரிசையில் இடம் பெற்ற ஒரு சிறந்த திரைப்படம். தேனிசை தென்றல் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரகம். அதிலும் ‘மீசைக்கார நண்பா’ பாடல் மற்றுமொரு முஸ்தபா பாடல் கேட்டகரியில் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் வெளியாகி ஏராளமான விருதுகளை குவித்த கிளாசிக் ஹிட் திரைப்படம். அப்பா சரத்குமார், பண்ணையாராக இருக்கும் விஜயகுமாரிடம் பணிபுரியும் வேலையாட்களின் ஒருவர். விஜயகுமார் மனைவி சுஜாதாவின் கொலைக்கு காரணமானவர் மன்சூர் அலிகான் என்றாலும் அந்த பழியை தன் மீது போட்டுக்கொண்டு சிறை தண்டனையை அனுபவிப்பார் அப்பா சரத்குமார். அந்த நன்றி கடனுக்காக மகன் சரத்குமாரை தன்னில் பாதியாக அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து வருவார் பண்ணையார் விஜயகுமார். பட்டணத்தில் படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு வரும் விஜயகுமார் மகள் சிம்ரன், அம்மாவை கொலை செய்தவரை பழிவாங்குவதற்காக மகன் சரத்குமாரை வைத்து காய் நகர்த்துகிறார்.
இறுதியில் அம்மாவின் கொலைக்கான காரணத்தை சிம்ரன் தெரிந்து கொண்டாரா? சுஜாதாவின் கொலைக்கு பின்னால் இருந்த உண்மை என்ன? இது தான் படத்தின் கதை. கிளைமாக்ஸ் காட்சியில் அப்பா சரத்குமார் உயிர் பிரிந்ததும் அவரை உயிர் நண்பனாக சுமந்த பண்ணையார் விஜயகுமாரும் அதே இடத்தில் இறந்து போக பார்வையாளர்களின் கண்கள் குளமானது. நட்பின் உன்னதத்தை போற்றிய இப்படம் காலத்தால் அழியாத காவியமாக எத்தனை எத்தனை ஆண்டுகளை கடந்தாலும் அன்றைய தலைமுறை ரசிகர்களால் நிச்சயம் கொண்டாடப்படும்.
90ஸ் காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ். ரவிக்குமார் எந்த நடிகருடன் கூட்டணி சேர்ந்தாலும் அந்த காம்போ ஒரு விதமான மேஜிக் ஏற்படுத்தும். அப்படி நடிகர் சரத்குமார் - கே.எஸ். ரவிக்குமார் காம்போவில் வெளியான சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை பட வரிசையில் இணைந்த அடுத்த வெற்றி காவியம் 'நட்புக்காக'. இது கே.எஸ். ரவிக்குமார் மற்றும் சரத்குமார் இருவரின் திரைப்பயணத்திலும் மிக முக்கியமான மைல்கல் திரைப்படம்.