கே.ஆர்.விஜயா
எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்தவர் பழம் பெரும் நடிகை கே ஆர் விஜயா. 1960 முதல் இப்போது வரையில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்து பல சாதனைகளையும், விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். கேஆர் விஜயா மட்டுமின்றி அவரது சகோதரியான கேஆர் வத்சலாவும் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 'காலம் வெல்லும்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் வத்சலா. பாக்யராஜ் நடிப்பில் வந்த சுந்தர காண்டம என்ற படத்தில் கே ஆர் வத்சலா முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதன் பிறகு சுபாஷ், தர்ம சக்கரம், அருணாச்சலம், காதலுக்கு மரியாதை, தினமும் என்னை கவனி, புத்தம் புது பூவே, இனி எல்லாமே சுகமே என்று ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கே.ஆர்.வத்சலா
மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் வத்சலா நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த வத்சலா, தான்... உயிரோடு இருப்பதற்கு தன்னோட அக்காதான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் பிறக்கும் போது ராசி நட்சத்திரம் பார்த்தாங்க. அதுல என்னோட நட்சத்திரம் மூலம். இது குடும்பத்துக்கு ஆகாதுன்னு நான் ராசியில்லாதவள் என்று சொன்னார்கள்.
அதனால், எனக்கு சரியாக தாய்ப்பால் கூட கிடைக்கவில்லை. அதனால் ருமாட்டிக் காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் நான் இறந்துவிட்டேன் என்று என்னை வீட்டிற்கு பின்புறம் புதைக்க கூட ஏற்பாடு செய்தார்கள். அப்போது என்னோட அக்கா பழநி மலைக்கு சென்று, நவபாஷாணம் சிலையில் உருவான மூலவர் முருகனின் அபிஷேக பாலை கொண்டு வந்து என் வாயில் ஊற்றியுள்ளார். அப்போது என்னுடைய சுண்டு விரல் அசைவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வத்சலா நடிப்பு
பின்னர் எனக்கு பக்க பலமாக இருந்தது என்னுடைய அக்கா தான் என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அக்கா கே.ஆர்.விஜயாவுடன் சிறு வயது முதலே ஷூட்டிங்கிலேயே வத்சலாவும் இருப்பது உண்டு. கேஆர் விஜயா உடன் ஷூட்டிங் செல்லும் வத்சலா சிவாஜி கணேசன், ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோருடன் பேசி இருக்கிறார். நடிப்பு மீது ஆர்வம் கொண்ட வத்சலா, நடிகை பத்மினியிடம் நடிப்பு கற்றுக் கொண்டுள்ளார். 12 வயதாக இருந்த போதே காலம் வெல்லும் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.
ஆனால், இந்தப் படம் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. ஆதலால் படிக்க சென்று பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப சினிமாவுக்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு வயது 28. இப்போது வரைக்கும் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். விஜய், அஜித் ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.