பிரபு நடித்த கோழிகூவுது படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் காமெடி நடிகை பிந்து கோஷ். உருவங்கள் மாறலாம், டௌரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்ககூட்டி, நீதியின் நிழல், மங்கம்மா சபதம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதுவும் மாஸ் ஹீரோக்களான சிவாஜி கணேசன், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு, மோகன், ரஜினிகாந்த், கார்த்திக், விவேக், நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
இன்றைய சினிமாவில் உருவக்கேலிக்கு மத்தியில் குண்டாக இருந்தும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் தான் பிந்துகோஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இன்று உயிர் வாழ்வதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு 2 மகன்கள் இருக்கிறார். அதில் மூத்தவர் தன்னால் பார்க்க முடியாது என்று பெங்களூருவிற்கு சென்றுவிட்டார். 2ஆவது மகன் தான் கவனித்துக் கொள்கிறார். ஆனால், மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு மாதத்திற்கு 10,000க்கும் மேல் செலவு ஆகும் நிலையில், நடிகர், நடிகைகளிடம் உதவி கேட்டிருந்தார். ஆனால், ரஜினிகாந்த், கமல் ஹாசன் கூட உதவி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பிந்து கோஷிற்கு உதவி செய்ய வேண்டி ஷகீலா வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில் நம்மை சிரிக்க வைத்த பிந்து கோஷ் இன்று சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். சினிமா துறையைச் சேர்ந்த ஒருவர் இன்று கஷ்டப்படுகிறார். அவருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று கேட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து KPY பாலா அவரது வீட்டிற்கு சென்று தன்னால் முடிந்த ரூ.80,000 பணத்தை கொடுத்து உதவி செய்துள்ளார்.
பாலாவை பிந்து கோஷ் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் ஷகீலா. பாலாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார் பிந்து கோஷ். அதற்கு பாலா நாங்கள் உங்களை சிறு வயதில் பார்த்திருக்கிறோம். உங்களை இன்று இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது. தன்னால் இவ்வளவு தான் இப்போதைக்கு முடியும் என்று 80 ஆயிரம் கொடுத்திருக்கிறார். என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். நாங்கள் இருக்கிறோம் என்று கூறிவிட்டு வந்துள்ளார்.
சினிமாவில் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கும் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் 10 ஆயிரம், 20 ஆயிரம், 30 ஆயிரம் என்று கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் KPY பாலா தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளது பலரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.