Just In





Watch Video: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ் - பாலா.. குவியும் பாராட்டு
பாலாவுடன் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இணைந்து பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பைக் கேட்ட பெற்றோர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் - கேபிஒய் பாலா இருவரும் இணைந்து உதவியுள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் உள்ள ஒவ்வொரு பிரபலத்துக்கும் தனிப்பட்ட முறையில் ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரபலங்களில் ஒவ்வொரு அசைவையும் பின்பற்றும் ரசிகர்களுக்கு அந்த பிரபலங்கள் என்ன செய்தார்கள் என கேட்டால் கேள்விக்குறி தான். இதனை சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து தான் வருகின்றனர். சில பிரபலங்கள் வெளிப்படையாக தெரிய வேண்டும் என்பதற்காகவும், சிலர் தெரியவே கூடாது என சொல்லியும் உதவி செய்கிறார்கள். சிலர் தான் மனமுவந்து எந்த நோக்கமும் இல்லாமல் உதவுகிறார்கள்.
அந்த வகையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது வாழ்க்கையை தொடங்கிய பாலா 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி விஜய் டிவி வாயிலாக ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ஒவ்வொரு நிகழ்ச்சி வாயிலாகவும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் பாலா அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை தன்னிடம் உதவி கேட்பவர்களின் தேவை அறிந்து உதவி செய்து வருகிறார். குழந்தைகள் படிப்பு, ஆதரவற்ற முதியவர்கள் பராமரிப்பு, மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, கடந்த டிசம்பர் மாதம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பண உதவி என தன்னலமின்றி சமூக சேவை செய்து வருகிறார்.
சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்த வீடியோ வைரலானது. இப்படியான நிலையில் பாலாவுடன் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இணைந்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவி வருகிறார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளியில் கழிப்பிடம் கட்டி கொடுத்தது மட்டுமல்லாமல் கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் கஷ்டப்படும் பெண்ணுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி கொடுத்தார்கள்.
இந்நிலையில் பாலா மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாற்றுத் திறனாளிகளான இந்த அழகான குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் என்னிடம் வாகனம் கேட்டார்கள். எனவே நானும் எனது ரோல்மாடல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரும் சேர்ந்து இந்த அழகான குடும்பத்திற்கு இந்த வாகனத்தை வாங்குவதற்கு சமமாக பணத்தை பகிர்ந்து கொண்டோம்” என தெரிவித்துள்ளார். பாலா மற்றும் ராகவா லாரன்ஸின் இந்த உதவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.