தமிழ் சினிமாவில் இன்று ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள் என்றாலும் ஒரு காலத்தில் ஆண் நகைச்சுவை நடிகர்களோடு சரிசமமாக அனைத்து திரைப்படங்களில் தனது தனித்துவமான நகைச்சுவையால் கலக்கிய பெண் நகைச்சுவை நடிகை கோவை சரளா. அவரின் கீச் குரலும் கொங்கு தமிழும் தான் அவரின் பக்க பலமே. பல வகையான கதாபாத்திரங்களில் வெகு சிறப்பாக நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். 


 



சிறந்த பெண் நகைச்சுவை நடிகை :


கோவை சரளாவின் சில வசனங்கள் ஆண்டுகால கடந்த பின்பும் இன்றும் மிகவும் ட்ரெண்டிங். குறிப்பாக அவரின் ஸ்டைல் ஸ்நேகிதனை... ஒரிஜினல் பாடலையே மிஞ்சியது எனலாம். கவுண்டமணி, செந்தில், கோவை சரளா காம்பினேஷன் நகைச்சுவையை மிஞ்ச யாராலும் முடியவே முடியாது. சதிலீலாவதி திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தது அவருக்கு பெரும் பாராட்டை பெற்று தந்தது. 






ரீ என்ட்ரி கொடுக்கும் கோவை சரளா:


சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார் கோவை சரளா. ஆனால் சமீபகா காலமாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் கோவை சரளா. நடிகர் அஜித் குமார் - நயன்தாரா நடிப்பில் வெளியான "விஸ்வாசம்" திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் "கிக்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கோவை சரளா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஃபயர் புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்மான தகவல் ட்விட்டர் மூலம் வெளியாகியுள்ளது. 






கன்னட ரீமேக் "கிக்"  திரைப்படம் :


கன்னடத்தில் "ஜூம்" என்ற பெயரில் வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து அதனை தமிழி ரீமேக் செய்கிறார் கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ். இப்படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி எனும் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பார்டியூன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார் நவீன் ராஜ். இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் அர்ஜுன் ஜனயா. சமீபத்தில் தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் மற்றுமொரு புதிய அப்டேட் என்னவென்றால் நடிகர் செந்தில் இப்படத்தில் கேசியோ எனும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கோவை சரளா மற்றும் நடிகர் செந்தில் கதாபாத்திரத்தை அறிவிக்கும் படி ஒரு புதிய போஸ்டரை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர்.