அண்ணாமலை:
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் , ரஜினிகாந்த் , குஷ்பு நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை . இந்த திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிறது. ஏழை , பணக்கார நண்பர்களிடையே ஏற்படும் விரிசலும் , அதனால் பாதிக்கப்படும் ஏழை நண்பன் எப்படி தான் விடுக்கும் சவாலில் ஜெயித்து காட்டுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் .
கொண்டையில் தாழம்பூ :
அண்ணாமலை படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் , தீம் மியூசிக் என அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களில் ஒன்றுதான் ‘கொண்டையில் தாழம்பூ ‘ . இதனை எஸ்.பி.பி-யும் சித்ராவும் இணைந்து பாடியிருப்பார்கள். இந்த பாடல் எழுதுவதற்கு முன்னதாக காட்சியை விளக்கிவிட்டு, இதில் ரஜினி, குஷ்பூ என இருவரின் பெயர்களும் இடம்பெரும்படியாக எழுத வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கவிஞர் வாலியிடம் விருப்பத்தை சொல்லவே அவரும் தனது பாணியில் 'கொண்டையில் தாழம்பூ ..நெஞ்சிலே வாழைப்பூ...கூடையில் என்ன பூ..குஷ்பூ 'என எழுதிவிட்டார்.
ரஜினி ஐடியா :
ரஜினிக்கு எந்த அளவுக்கு ஆடியன்ஸ் இருந்தார்களோ அதே அளவிற்கு குஷ்புவிற்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தனர். இந்த சூழலில்தான் இயக்குநரிடம் ரஜினிகாந்த் பாடலின் இறுதியில் வரும் வரியை மியூட் செய்துவிட்டு , கூடையில் என்ன பூ என ஆடியன்ஸை நோக்கி கேட்கலாமே என ஐடியா கொடுத்திருக்கிறார். அதுவும் நன்றாகத்தான் இருக்கும் என , ரஜினியின் ஐடியாவிற்கு பச்சைக்கொடி அசைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் குஷ்பு முதன் முதலில் பாடலை கேட்டு சிரித்துவிட்டு , ”என்ன சார் இதெல்லாம்” என கேட்க , ”ரஜினி தியேட்டர்ல பாருங்க “ என கூறியிருக்கிறார்.
திரையரங்கை விட்டு ஓடிய குஷ்பு :
படம் வெளியானதும் கமலா திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றிருக்கிறார் குஷ்பு. கொண்டையில் தாழம்பூ பாடல் ஒலிக்க ஆரமித்ததும் , கூடையில் என்ன பூ என ரஜினி கேட்க , திரையரங்கே ”குஷ்பூ.....”என கத்தியிருக்கிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத குஷ்பு பயத்தில் அங்கிருந்து ஓடி வந்துவிட்டாராம்.