தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாகவும், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவராகவும் உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் அப்டேட் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில், இன்று அஜித்குமார் நடிக்கும் 63வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயர் சூட்டியுள்ளனர்.


ஆங்கில பெயர்களுக்கு மாறும் தமிழ் படங்கள்:


தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான திரைக்கதை, ஒவ்வொரு விதமான வடிவம் என்று தன்னை மெருகேற்றிக் கொண்டே உருமாறி வருகிறது. குறிப்பாக, 2000த்திற்கு பிறகு ஏற்றங்களையும், இறக்கங்களையும் மாறி, மாறி தமிழ் சினிமா கண்டு வருகிறது. ஆனால், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வைக்கப்படும் படங்களின் தலைப்புகளில் தமிழ் மொழி காணாமல் போய் வருகிறது என்பதே உண்மை.


தமிழ் சினிமாவில் பெரும் வசூலை வாரிக்குவிக்கும் பெரிய நடிகர்களின் படங்களில் இருந்து சிறிய நடிகர்கள் வரை தமிழ் பெயர்களை தவிர்த்து வருகின்றனர். ரசிகர்களை கவரும் நோக்கத்தில் இதுபோன்று பெயர்கள் வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது ஆரோக்கியமான போக்கு அல்ல.


அனைத்து ரசிகர்களுக்கும் புரியுமா?


விஜய் தற்போது கோட் அதாவது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அஜித் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். தமிழ்நாட்டில் ஏ, பி மற்றும் சி என அனைத்து சென்டர்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்கள் இவர்கள். இதுபோன்ற ஆங்கில தலைப்பானது பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு புரியும். அதன் அர்த்தம் தெரியும்.


ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இளைஞர்கள் மட்டுமின்றி நடுத்தர மற்றும் வயதானவர்களும் ரசிகர்களாக உள்ளனர். அந்த நடுத்தர மற்றும் வயதான ரசிகர்களில் பலர் ஆங்கிலம் தெரியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு கோட், குட் பேட் அக்லி என்ற பெயர்கள் எளிதில் சென்றடையாது. இது அந்த நடிகர்களுக்கு பின்னடைவு என்பதை காட்டிலும் ரசிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே கருதப்படுகிறது.


பாதிக்கப்படும் பி, சி சென்டர் ரசிகர்கள்:


பெரும்பாலான குடும்ப ரசிகர்களை கொண்ட விஜய், கடந்த சில ஆண்டுகளாக நடித்த படங்களுக்கு பீஸ்ட், மாஸ்டர், பிகில், சர்கார், மெர்சல், தெறி என ஆங்கிலத்திலே பெரும்பாலும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2015க்கு பிறகு விஜய் நடித்த பல படங்களுக்கு ஆங்கில தலைப்புதான் வைக்கப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜெயிலர் படமும் ஆங்கில தலைப்பிலே வெளியானது.


உச்சநட்சத்திரங்களான இவர்கள் மட்டுமின்றி வளர்ந்து வரும் நடிகர்கள், அறிமுக நடிகர்கள் என பலரும் தமிழ் தலைப்புகளுக்கு பிறகு ஆங்கில தலைப்பை விரும்புகின்றனர். இது பி மற்றும் சி சென்டர் ரசிகர்களிடம் இருந்து சினிமாவை மெல்ல மெல்ல பிரித்துக் கொண்டு செல்லும் என்பதே உண்மை. எந்தவொரு படமும் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பி மற்றும் சி சென்டர் ரசிகர்களின் ஆதரவு வேண்டும் என்பது மறுக்கவே முடியாத உண்மை. பி மற்றும் சி சென்டர் ரசிகர்களின் ஆதரவை மட்டுமே கொண்டு நூறு நாட்கள் வரை ஓடிய படங்களின் பட்டியல் ஏராளமானவை.


ஆங்கிலத்தில் வைத்தால் ஹாலிவுட் தரமா?


பான் இந்தியா அளவில் படத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்திலும், ரசிகர்களின் கவனத்தை தங்கள் திருப்ப வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்று தொடர்ந்து ஆங்கில மொழியில் தலைப்பு வைக்கும் பாணியை கடைபிடிப்பதால் மட்டும், தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு உயர்ந்து விடாது. திரைக்கதை, தொழில்நுட்பம், கலைஞர்கள், உருவாக்கும் விதம் ஆகியவற்றை மெருகேற்றுவதால்தான் படங்களின் தரம் முன்னேறும். எனவே, இனி வரும் காலங்களில் அனைத்து ரசிகர்களையும் எளிதில் சென்று சேரும் வகையிலும், தமிழ் சினிமா என்பதாலும் தமிழில் தலைப்பு வைத்தால் கோலிவுட் பெயருக்கு என்று ஹாலிவுட் ஆவதை தவிர்க்கலாம்.