இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இன்றளவு ரஜினிகாந்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது. ரஜினி ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த காலம் முதல் அவரது படத்திற்கு வைக்கப்படும் தலைப்புகளுக்கு என்று தனி மாஸ் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், சமீபகாலமாக ரஜினிகாந்த் நடித்த படங்களின் தலைப்பில் நடிக்க இளம் ஹீரோக்கள் முதல் முன்னணி ஹீரோக்கள் வரை மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் ரஜினிகாந்தின் படத் தலைப்பை இதுவரை கைப்பற்றிய நாயகர்கள் யார்? யார்? என்ற பட்டியலை கீழே காணலாம்.
அஜீத்குமார்
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான அஜீத்குமாருக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது பில்லா ஆகும். ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான பில்லா படத்தை கடந்த 2007ம் ஆண்டு அஜீத் நடிப்பில் ரீமேக் செய்தனர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் அஜீத்குமாருக்கு கேங்ஸ்டர் என்ற பட்டத்தையும், டான் ஆப் தி டான் என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்தது. பின்னர், 2012ம் ஆண்டு பில்லா 2 படம் 2012ம் ஆண்டு வெளியானது.
சிவகார்த்திகேயன் :
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், கடந்த 2017ம் ஆண்டு வேலைக்காரன் என்ற படத்தில் நடித்தார். 1987ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் படமான வேலைக்காரன் தலைப்பிலே சிவகார்த்திகேயன் நடித்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. தற்போது, மீண்டும் ரஜினிகாந்தின் வெற்றிப்படங்களில் ஒன்றான மாவீரன் படத்தின் அதே தலைப்பிலே சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.
தனுஷ் :
ரஜினிகாந்த் ஆக்ஷன் அவதாரம் எடுத்த காலத்தில் நடித்து வெற்றிப்படமாகிய பொல்லாதவன் படத் தலைப்பில், 2007ம் ஆண்டு முன்னணி நடிகர் தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் முதல் படமான பொல்லாதவன் உருவானது. இந்த படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. பின்னர், ரஜினிகாந்தின் மற்றொரு பிளாக்பஸ்டரான தங்கமகன் படத்தின் தலைப்பில் 2015ம் ஆண்டு தனுஷ் நடித்த தங்கமகன் திரைப்படம் தோல்விப்படமாக அமைந்தது.
கார்த்தி :
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவவராக வலம் வருபவர் கார்த்தி. 2010ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்த நான் மகான் அல்ல திரைப்படம் கார்த்திக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. 1984ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த நான் மகான் அல்ல திரைப்படமும் வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் :
ரஜினிகாந்தின் ஆக்ஷன் பிளாக்பஸ்டர் வரிசையில் எப்போதும் இடம்பெற்றிருக்கும் திரைப்படம் நான் சிகப்பு மனிதன். பழிவாங்கும் திரைக்கதையான இந்த படம் இன்றும் ரஜினி ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. 2014ம் ஆண்டு நடிகர் விஷால் இதே தலைப்பில் நடித்த திரைப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
உதயநிதி ஸ்டாலின் :
சூப்பர்ஸ்டாரின் சூப்பர்ஹிட் கலெக்ஷன்களில் எப்போதும் இடம்பெற்றிருக்கும் திரைப்படம் மனிதன். இதே தலைப்பில் 2016ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் திரை வாழ்க்கையிலே முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு பிறகு உதயநிதி தரமான கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிதது வருகிறார்.
கிருஷ்ணா :
ரஜினிகாந்த் நடிப்பில் மர்மங்கள், திகில், பயணம் என அட்வென்சர் திரைப்படமாக வெளியாகி ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்தாக அமைந்த படம் கழுகு. இதே பெயரில் நடிகர் கிருஷ்ணா நடிப்பில் 2012ம் ஆணடு கழுகு படம் வெளியானது. இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியால் 2019ம் ஆண்டு கழுகு 2ம் பாகம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சுந்தர்.சி :
தமிழ் சினிமாவில் கலக்கலான காமெடி மற்றும் பேய் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்.சி. இவர் ரஜினிகாந்தின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த தீ படத்தின் தலைப்பில் 2009ம் ஆண்டு நடித்தார். இந்த படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது. ரஜினிகாந்த் பிரபுவுடன் இணைந்து நடித்த குரு சிஷ்யன் பிளாக்பஸ்டர் படம் ஆகும். இதே தலைப்பில் சத்யராஜூடன் இணைந்து 2010ம் ஆண்டு சுந்தர்.சி நடித்த படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது.
சிவா:
ரஜினிகாந்த் முழு நீள அளவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தில்லு முல்லு. இந்த படம் ரஜினி கேரியரில் தவிர்க்க முடியாத படம் ஆகும். இதே பெயரில் இதே கதையை 2013ம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியானது. இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.
விடுதலை :
ரஜினிகாந்த், சிவாஜி, கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்தன் ஆகியோர் இணைந்து நடித்த விடுதலை திரைப்படம் ரஜினிகாந்தின் ஆக்ஷன் கலெக்ஷன்களில் முக்கியமான படம் ஆகும். தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நாயகனாக உருவாகி வரும் படத்திற்கும் விடுதலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்