இந்திய திரையுலகத்த்திற்கே எடுத்துக்காட்டாக திகழும் திரையுலகம் தமிழ் திரையுலகம். முழுக்க ஆக்ஷன் சினிமாவை நம்பி தெலுங்கு திரையுலகமும், கதைக்களங்கள் மூலமாக மென்மையான படங்கள் மூலமாக வெற்றி பெற்ற  மலையாள திரையுலகமும், சிறிய பட்ஜெட் படங்கள் மூலமாக வெற்றிகரமான சினிமாவாக திகழ்ந்து கொண்டிருந்த கன்னட சினிமா மத்தியில் ஆக்ஷன் படங்கள், நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் என அனைத்து தரப்பினருக்கும் திருப்திப்படுத்தும் வகையில் கோலோச்சி வருவது கோலிவுட். 

Continues below advertisement

பான் இந்தியா வெற்றி தேவையா?

ஆனால், சமீபகாலமாக கோலிவுட்டின் நிலவரம் மிகவும் வருந்தத்தக்க நிலையில் உள்ளது. தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா,  கன்னடத்தில் கேஜிஎஃப் ஆகிய படங்கள் பான் இந்தியா வெற்றி பெற்ற பிறகு பான் இந்தியா படங்கள் என்ற கலாச்சாரம் தமிழ் சினிமாவிலும் பரவி வருகிறது. பெரிய நடிகர்கள் படம் என்றாலே அதை இந்திய அளவில் ரிலீஸ் செய்து பான் இந்தியா என்று பிரபலப்படுத்தி பின்னர் படத்தின் தோல்விக்கு அதுவே காரணம் ஆகிவிடுகிறது. 

கதையில் சறுக்கல்:

அதற்கு தற்போது வெளியாகியுள்ள கூலி படம் எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. தமிழ் சினிமா தரமான கதைக்களம், நல்ல பாடல்கள் இதை நம்பியே இயங்கி வெற்றிகண்டது. அதற்கு சென்னை 28, சுப்ரமணியபுரம் என நூற்றுக்கணக்கான படங்களைப் பட்டியலிடலாம். ஆனால், இன்று பான் இந்தியா என்ற அழுத்தத்தில் எடுக்கப்படும் படங்கள் கதை மற்றும் திரைக்கதையில் ஓட்டை விட்டு வெறும் பணத்தை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்களாக மாறி வருகின்றன.

Continues below advertisement

சீரழிக்கும் கேமியோ:

தமிழ் சினிமாவை சீரழிக்கும் மற்றொரு முக்கிய விஷயமாக தற்போது மாறியிருப்பது கேமியோ. கெளரவ வேடம் என்பது பல காலமாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. ரஜினியின் படங்களில் கமலும், கமலின் படங்களில் ரஜினியும், மற்ற நடிகரின் படங்களில் சக நடிகர்களும் நடிப்பது சகஜமாக ஒன்றாகவே உள்ளது. ஆனால், சமீபகாலமாக அதை கேமியோ என்று கூறி, அந்த சாதாரண கதாபாத்திரங்களுக்கு அண்டை மாநிலங்களில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரங்களை களமிறக்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றனர். 

கேமியோ கலாச்சாரம்:

ஆனால், அந்த கதாபாத்திரம் மிக மிக சாதாரண கதாபாத்திரமாக இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் சில நிமிடங்கள் வந்தாலும் மிகவும் பவர்ஃபுல்லான கதாபாத்திரமாக அமைந்தது. இதனால், தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ரசிகர்கள் கேமியோ என்றாலே ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு நிகராக எதிர்பார்க்கின்றனர். 

ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாக கேமியோ என்ற பெயரில் மிகப்பெரிய நடிகர்களை களமிறக்கி, பின்னர் ரசிகர்களை ஏமாற்றுவதாலே பெரிய படங்கள் கடும் விமர்சனத்தை சந்திக்கிறது. கூலி படத்தில் வரும் அமீர்கானின் கேமியோவையுமே பலரும் அப்படித்தான் விமர்சித்து வருகின்றனர். 

பில்டப் ப்ரமோஷன்:

இவை அனைத்தையும் காட்டிலும் தமிழ் சினிமாவிற்கு இன்று மிகப்பெரிய வில்லனாக மாறியிருப்பது பில்டப் ப்ரமோஷனே ஆகும். ஒரு படம் சாதாரணமாக வெளியாகி வெற்றி பெற வேண்டியதை ப்ரமோஷன் என்ற பெயரில் பில்டப்களை அள்ளிக்கொடுத்து, எதிர்பார்ப்பை எகிறவைத்து படத்தில் ஒன்றுமே இல்லை என்று தெரிய வரும்போது ரசிகர்களின் கடும் அதிருப்தியை பெற்றுக் கொள்வதுடன் படமும் படுதோல்வி அடைகிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான கங்குவா. 

மேலும், முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் பணியாற்றிய அனைவரைப் பற்றியும் பாராட்டிப் பேசுவார்கள். ஆனால், சமீபத்தில் நடக்கும் மிகப்பெரிய நடிகர்களின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் கதாநாயகனின் புகழ்பாடும் விழாவாகவே அது மாறி வருகிறது. ரஜினிகாந்த் இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் என்றாலும் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா ரஜினியின் புகழ்பாடும் விழாவாகே மாறி நின்றது. 

கதைதான் ஹீரோ:

லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி, ஹவுஸ் மேட்ஸ் என கதைக்களங்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வெற்றி பெற்று அசத்தியது. அதுபோல வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த இயக்குனர்களும் கதைக்கு தேவையான இடங்களில் கமர்ஷியலைப் பயன்படுத்தினால் வெற்றி கிட்டும். அதை விடுத்து சண்டைக் காட்சிகளுக்கும், ரத்தக் காட்சிகளுக்கும் நடுவில் கதையைத் திணித்தால் வெற்றி பெறுவது கடினம். இத்தனை சவால்களுக்கு மத்தியில் எந்த படம் வந்தாலும் படம் வருவதற்கு முன்பே இணையத்தில் படத்திற்கு எதிராக கருத்துக்கள் பரப்ப ஒரு கூட்டத்தினர் ஆர்வமாக இருக்கின்றனர். அந்த நெகட்டிவ் விமர்சனங்கள் நல்ல படங்களுக்கும் சில நேரங்களில் வில்லனாக மாறுகிறது.

வீண் ப்ரமோஷன்கள், கதைக்கு தேவையற்ற கேமியோ போன்றவற்றை தவிர்த்து விட்டு கதைக்கு தேவையான கதாபாத்திரங்களுடன் களமிறங்கினால் கண்டிப்பாக கோலிவுட் மீண்டும் இந்திய சினிமாவைத் திரும்பி பார்க்க வைக்கும். ஏனென்றால், பாட்ஷா, படையப்பா, நாயகன் போன்ற மாபெரும் படங்கள் கேமியோவையோ, பில்டப் ப்ரமோஷனையோ நம்பி எடுக்கப்பட்ட படங்கள் அல்ல.