பருத்தி வீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி நடிகர் கார்த்தி இன்றோடு 16 ஆண்டுகளை நிறைவு செய்வதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் கார்த்தி சினிமாவில் இன்று ஒரு முன்னணி நடிகராக வலம் வருகிறார். 16 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அறிமுகமான 'பருத்திவீரன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கிராமத்து பின்னணியில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகை பிரியாமணி, கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, சம்பத்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என சொல்வதை காட்டிலும் வாழ்ந்து இருந்தனர் என்றே சொல்ல வேண்டும்.
பாரதிராஜாவை பாணியை பின்பற்றிய அமீர் :
கிராமத்து இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரரான பாரதிராஜாவை நினைவுக்கு கொண்டு வந்தவர் அமீர். தனது மூன்றாவது திரைப்படமான 'பருத்திவீரன்' படத்திற்காக கிராமத்தில் கேமராவின் கால்களை ஊன்றியவர். இப்படத்திற்காக அவரின் தேர்வு ஒவ்வொன்றும் மிகவும் துணிச்சலானது. அமெரிக்காவில் இருந்து வந்திறங்கிய கார்த்தி, புறக்கணிக்கப்பட்ட பிரியாமணி, அதிர்ஷ்டம் இல்லாதவர் என ஒதுக்கிவைக்கப்பட்ட சரவணன் என திரையுலகமே இது எப்படி ஒர்க் அவுட் ஆகும் என முணுமுணுத்தனர். இப்படி எதிர்மறையான விமர்சனங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு வெற்றிப்படமாக கொடுத்த கிரெடிட் அனைத்தும் இயக்குனர் அமீரையே சேரும்.
மாஸ் காட்டிய கார்த்தி
முதல் படமே எல்லோருக்கும் வெற்றியாக அமைவதில்லை. பலருக்கு அது தோல்வியாக அமைந்து அனுபவத்தையே கற்றுக் கொடுத்துள்ளது. சிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என அவரது ரசிகர்கள் மட்டுமே பருத்திவீரன் படத்தை கொண்டாட தயாரானார்கள். ஆனால் நான் அதுக்கும் மேலே என நிரூபித்துக் காட்டினார் கார்த்தி. ஃபிரேம் பை ஃபிரேம் பருத்திவீரனாக மின்னினார். எங்கு சென்றாலும் அந்த பட வசனத்தை பேச வைத்து தான் அவரை அழகு பார்க்கிறார்கள்.
தனித்துவம்
16 ஆண்டுகளில் கார்த்தி மணிரத்னம், செல்வராகவன் என முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து விட்டார். அவரது சினிமா கேரியரில் ஆயிரத்தில் ஒருவன்,பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தோழா, கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, பொன்னியின் செல்வன், சர்தார் என பல படங்களில் அவரின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. 21வது படமாக விருமன் வெளியான நிலையில், அதற்கு முன்னான 20 படங்களில் அவர் ஒவ்வொரு படத்திலும் புதிய இயக்குநர்களிடையே இணைந்தார்.