படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும், கமலேஷ் கதாபாத்திரத்திற்கு தான் டப்பிங் கொடுக்க வேண்டும் என கே.வி.ஆனந்த் கேட்டுக் கொண்டதாக அஜய் கபூர் தெரிவித்துள்ளார்.
கோலங்கள் ‘ஆதி’
சன் தொலைக்காட்சியில் 2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி மக்களிடம் பெரும் கவனமீர்த்த சீரியல் கோலங்கள். தேவயானி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இந்தத் தொடரில் ஆதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனமீர்த்தார் நடிகர் அஜர் கபூர். இந்தத் தொடரில் கிடைத்த புகழைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான வள்ளி சீரியலிலும் நடித்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருவது என்பது நிறைய நடிகர்களின் கனவாக இருக்கிறது. ஆனால் சின்னத்திரையில் தான் நடித்த வந்த சீரியலுக்காக தனக்கு வந்த மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றை விட்டுக் கொடுத்துள்ளார் நடிகர் அஜய் கபூர்,
அயன் படத்தில் அஜய் கபூர்
மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் அயன். சூர்யா, தமன்னா, பிரபு, கருணாஸ், ஜகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்தார். அயன் படம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதியுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்தது.
சூர்யாவின் நடிப்பு கரியரில் குறிப்பிட்டு கவனிக்கும்படியான வெற்றிப் படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் கே.வி.ஆனந்த் இயக்கிய படங்களில் இது அவரது மாஸ்டர்பீஸ் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறாகள். இந்தப் படத்தில் கமலேஷ் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் ஆகாஷ்தீப் சைகல் நடித்திருந்தார். இந்தி கலந்து தமிழ் பேசும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில், கமலேஷ் கதாபாத்திரத்தில் தான் தான் நடிக்க இருந்ததாக நேர்க்காணல் ஒன்றில் அஜய் கபூர் தெரிவித்துள்ளார்.
“அயன் படத்தில் கமலேஷ் கதாபாத்திரத்தில் என்னை நடிக்கவைக்கச் சொல்லி கே.வி ஆனந்திடம் கூறினார் அவரது தந்தை. அன்றைய சூழலில் நான் கோலங்கள் சீரியலில் நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை, கே.வி ஆனந்த் என்னிடம் இந்த கேரக்டரில் நான் உங்களை தான் நடிக்கவைக்க வேண்டும் ஆசைப்பட்டேன். நீங்கள் நடிக்கவில்லை என்றாலும் இந்த கேரக்டருக்கு டப்பிங் நீங்கள்தான் செய்ய வேண்டும் என்றார்” என்று அஜய் கபூர் கூறியுள்ளார்.
அயன் படத்தில் கமலேஷ் பேசும் பல வசனங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக ”லட்டுல வச்சேனு நினைச்சியா தாஸ், நட்டுல வச்சேன்’ எனும் வசனம் மீம்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.