தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரே படத்தில் உச்சத்தை தொட்ட நடிகைகளை கடந்து வந்து இருந்தாலும் ஒரு சிலர் வந்த சுவடு தெரியாமலேயே காணாமலும் போய் இருக்கிறார்கள். அந்த வகையில் முதல் படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் ஜோடியாக 'ரெட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா கில். அதற்கு பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அஜித் ஜோடியாக நடித்த பிரியா கில் தற்போதைய நிலை என்ன? வாங்க பார்க்கலாம். 


 




மாடல் அழகியாக இருந்த பிரியா கில்லுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1996ம் ஆண்டு வெளியான 'தேரி மேரா சப்னா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் பிரியா கில். அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்திரச்சூர் சிங், அர்ஷத் வர்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெறத் தவறினாலும் தயாரிப்பாளர்கள் விரும்பும் ஒரு நடிகையாக மாறினார். சுனில் ஷெட்டியுடன் படே தில்வாலா படத்தில் நடித்திருந்தார். அகத்தியன் இயக்கிய சிர்ஃப் தும் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதால் அதில் நடித்த பிரியா கில் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 


அதன் தொடர்ச்சியாக தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அஜித் நடிப்பில் வெளியான 'ரெட்' படத்தின் கதாநாயகியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் பிரியா கில். அப்படம் அஜித் திரை பயணத்தில் மிக மோசமான தோல்வி படமாக அமைந்தது. இதனால் தமிழ் திரையுலகில் மார்க்கெட் இழந்த பிரியா கில் எந்த வாய்ப்பையும் பெறாததால் தமிழ் சினிமாவில் இருந்து விலகினார். 



தமிழ் சினிமாவை விட்டு விலகினாலும் இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 2006ம் ஆண்டு வெளியான 'பைரவி' திரைப்படம் தான் பிரியா கில் நடித்த கடைசி திரைப்படம். அத்துடன் சினிமாவில் இருந்து விலகினார். 


 




2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு டென்மார்க்கில் செட்டிலாகிவிட்டார். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் ஒரு மாடலிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது.  திரைத்துறையில் இருந்து விலகினாலும் ஒரு சில நடிகைகள் சோசியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். ஆனால் பிரியா கில் சினிமாவில் இருந்து முழுமையாக விடைபெற்ற பிறகு சோசியல் மீடியாவில் கூட அவர் ஆக்டிவாக இருப்பதில்லை என கூறப்படுகிறது.