இந்த ஆகஸ்ட் மாதம் தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. மாதம் துவங்கியதில் இருந்து அந்தகன், போட், மின்மினி என  பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதை தொடர்ந்து சுதந்திர தின ஸ்பெஷலாக ஆகஸ்ட் 15ம் தேதி அன்று மேலும் சில தமிழ் படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன எந்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 




தங்கலான் : 


பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்க வயல் சுரங்கத்தில் சுதந்திரத்துக்கு முன்னர் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 


ரகு தாத்தா :


இயக்குநர் சுமன் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடித்துள்ள திரைப்படம் ' ரகு தாத்தா'. மேலும் எம்.எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி மொழி எதிர்ப்பு பிரச்சினையை  மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் பெரிய அளவு வரவேற்பை பெறாததால் இப்படம் வெற்றி படமாக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 


 



 


டிமான்டி காலனி 2:


இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி  ஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் டிமான்டி காலனி 2. அருண் பாண்டியன், பிக் பாஸ் அர்ச்சனா, முத்துக்குமார்  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது. அதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ளது. ஒரு நல்ல பேய் படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.         


 நுனக்குழி (மலையாளம்) :


பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாசில் ஜோசப் கதாநாயகனாக நடிக்க நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்க, மனோஜ் கே.ஜெயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முதல் முறையாக ஜீத்து ஜோசப் காமெடி ட்ராக் ஜானரில் இயக்கியுள்ளார்.


 



மணிச்சித்ரதாழ் (மலையாளம்) :


இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி, திலகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலையாள சினிமாவின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


ஸ்ட்ரீ 2 (இந்தி) :


அமர் கௌசிக் இயக்கத்தில் மடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அபர்சக்தி குரானா, ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 


வேதா (இந்தி) :


நிகில் அத்வானி இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஜான் ஆபிரகாம், ஷர்வரி, அபிஷேக் பானர்ஜி மற்றும் தமன்னா பாட்டியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 


கேல் கேல் மெய்ன் (இந்தி) : 


முடாசர் அஜீஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமாருடன், அம்மி விர்க், டாப்ஸி பன்னு, வாணி கபூர் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேல் கேல் மெய்ன்'.