பாடகர் கேகே மரணத்திற்கான காரணம், அதிக கூட்டமும், கூட்டம் கூடி நிறைத்ததும், ஏசி வேலை செய்யாததும் என்று பல காரணங்கள் பலவிதமாக கூறப்படுகின்றன. இது எதுவுமே உண்மை இல்லை என்று விசாரணை நடத்திய கொல்கத்தா காவல் துறை கமிஷனர் வினீத் கோயல் கூறியுள்ளார்.


கேகே மரணம்


பிரபல பாடகர் கே. கே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத்.. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடி இருக்கிறார். தமிழில் காதல் வளர்த்தேன், நினைத்து நினைத்து பார்த்தேன் ஸ்ட்ராபெரி கண்ணே உள்ளிட்ட பல பாடல்களை இவர் பாடி இருக்கிறார். இந்த நிலையில் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.



கூட்ட நெரிசல் ஏற்பட்டதா?


இதுகுறித்து கமிஷனர் கோயல் பேசுகையில், "பாடகர் கேகே கடைசியாக பாடிய நஸ்ருல் அரங்கத்திற்கு மாலை 6.22 க்கு வந்தார். அவர் சரியாக 7.05க்கு மேடையில் ஏறினார். அவர் வருவதற்கு முன்பே அசிஸ்டண்ட் கமிஷனர் தலைமையில் ஒரு குழு அங்கு அமைக்கப்பட்டு இருந்தது. தேவையான காவல் பாதுகாப்பு அவருடன் இருந்தனர். அவரை கூட்டம் சூழ்வது போல எந்த நிகழ்வும் அங்கு நிகழவில்லை. அந்த அரங்கில் 2500 இருக்கைகள் உள்ளன. எல்லோருமே தன் சீட்டின் முன் நின்று கொண்டு நிகழ்ச்சியை பார்த்தனரே தவிர கூடுதல் கூட்டம் ஒன்றும் இல்லை. விடியோவிலேயே தாராளமாக பார்க்க முடியும், ரசிகர்கள் இலகுவாக நின்று நடனம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். பதிவான எந்த கேமராவிலும் இடமின்றி மக்கள் தவித்ததாக ஆதாரங்கள் இல்லை. எல்லா விடியோவிலும் மக்கள் நடனம் ஆடி, மகிழ்ந்து வருவது தெளிவாக தெரிகிறது. அங்கு கூடியிருந்த காவலர்களிடம், சிறப்பு விருந்தினர்களோ, விழா நடத்துபவர்களோ, ரசிகர்களோ வந்து எது குறித்தும் புகார் அளிக்கவில்லை." என்று கூறினார்.



அதிக டிக்கெட் விற்பனையா?


இருக்கை எண்ணிக்கையை விட அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்று கூறிய அவர், மேலும் பேசுகையில், "ஒருவேளை அதிகப்படியான மக்கள் கூடவேண்டிய சூழல் ஏற்பட்டால், அரங்கிற்கு வெளியே ஸ்க்ரீன் வைத்து திரையிடப்பட்டு வெளியே நிறுத்தப்படுவார்கள், மாறாக அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்ய மாட்டார்கள். ஆனால் அரங்கிற்கு வெளியே 150 மீட்டர் தொலைவில் தீயனைக்கும் கருவி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது." என்று கூறியுள்ளார்.


ஏசி வேலை செய்யவில்லையா?


அரங்கிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட கூட்டத்தை கலைப்பதற்காக அது பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் உடனடியாக போலீஸ் தலையிட்டு சூழநிலையை சரி செய்துள்ளனர் என்று கோயல் குறிப்பிட்டார். அரங்கில் ஏசி சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்படுகிறது, அது குறித்து கேட்கையில், அந்த செய்தி உண்மை அல்ல என்று குறிப்பிட்டு, அரங்க அதிகாரிகள் கூற்றின்படி எல்லா ஏசிக்களும் நன்றாகவே வேலை செய்வதாக குறிப்பிட்டார். அத்துடன், இனிமுதல், இதுபோன்ற இசை கச்சேரிகள், கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் அருகிலேயே ஒரு ஆம்புலன்ஸை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.