கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், சத்யா, ஃபேமிலி மேன் ஆகிய படங்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நடிகர் மனோஜ் பாஜ்பாய். தமிழில் சமர், அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நெட்ஃப்ளிக்ஸில் அவர் நடித்துள்ள கில்லர் சூப் வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனம் பெற்று வருகிறது. இதில் நாசர், இயக்குநர் கொங்கனா சென் ஷர்மா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் சென்னை வந்திருந்த மனோஜ் பாஜ்பாய் தனது புதிய வெப் சீரிஸ் குறித்தும் தமிழில் நடிப்பது குறித்தும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.


கில்லர் சூப் பற்றி


“ஒரு பெண் சொந்தமாக ரெஸ்டாரன்ட் தொடங்க வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. அப்போது அவர் வாழ்க்கையில் இரண்டு ஆண்கள் வருகிறார்கள். அவர்களால் என்ன பிரச்சனைகள் வருகிறது என்பதே இந்த தொடரின் கதை. இந்த சீரிஸில் முதல் முதல் முறையாக கணவன் , காதலன் என இரண்டு கதாபாத்திரங்களில் நான் நடித்திருக்கிறேன். இதில் மூன்றாவதாக ஒரு பரிமாணமும் இருக்கு. அது எனக்கு சவாலானதாக இருந்தது. ஒரு நடிகனாக ரசித்து நான் இந்த தொடரில் நடித்திருக்கேன். திரைக்கதையும் அதற்கான உழைப்பை என்னிடம் கோரியது. 


நாசருடன் நடித்த அனுபவம்


நாசரின் நடிப்புக்கு நான் அடிமை. அவர் நடித்த நிறைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவ்வை சண்முகி படத்தில் அவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும். அவருக்கும் ஓம் புரிக்கும் இடையிலான காட்சிகள் சிறப்பாக இருக்கும். இதை நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன். என் காலத்து நடிகர்கள் எல்லாம் நாசர், கமல்ஹாசன், ஓம்புரி, நஸீர் இவர்களைப் பார்த்து தான் நாங்கள் வளர்ந்தோம். அப்படியான ஒரு நடிகர் நாசர் சாருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி.


வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை


 :நல்ல வாய்ப்புகள் வரவில்லை என்பதே உண்மை. அஞ்சான் பெரிய வெற்றிபெற்றிருந்தால் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்திருக்கலாம். ஒரு சில நல்ல கதாபாத்திரங்கள் வந்தன, ஆனால் தெரியாத மொழியில் நடிப்பது என்பது சிரமமானது. அதில் என்னுடைய நூறு சதவிதம் உழைப்பை கொடுக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. மேலும் குறைவான நேரத்தில் ஒரு மொழியை கற்பது என்பது கடினம். அதனால் தமிழில் தொடர்ச்சியாக நடிக்க முடியவில்லை.

தமிழ் , மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் அதிகமாக கமர்ஷியல் படங்களில் நடிக்கவில்லை. அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறனின் படத்தில்  நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அவர் தரமான படங்களை எடுக்கிறார் என்பது மட்டும் இதற்கு காரணம் இல்லை, அவர் எல்லாருக்குமான படங்களை எடுக்கிறார். அவரது படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறுகின்றன" என்று அவர் கூறினார்.