கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். நடைபெற இருக்கும் கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) நடிகர் கிச்சா சுதீப் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக தேர்தலுக்கு முன்னர் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.







கிச்சா சுதீப் அரசியல் பிரவேசம் :


சில காலமாகவே சுதீப் அரசியலில் களமிறங்க உள்ளார் போன்ற செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது நடிகர் கிச்சா சுதீப் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ஏப்ரல் 5-ஆம் தேதியான இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் இணைந்து வெளியிடவுள்ளார் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பாஜகவில் இணையப்போவதில்லை. பிரச்சாரம் மட்டுமே செய்யப்போகிறேன் என தெரிவித்துள்ளார்.


ரசிகர்களின் விருப்பம் முக்கியம் :


முன்னர் சுதீப், தான் அரசியலில் இறங்கப்போவது குறித்து கூறுகையில் "அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நான் தொடர்பில் இருப்பது உண்மைதான். அவர்கள் அழைப்பு விடுவதும் உண்மை தான். ஆனால் அரசியலில் ஈடுபடுவது குறித்து நான் இதுவரையில் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. எனது முடிவுக்கு முன்னர் ரசிகர்கள் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சுதீப்புக்கு மிரட்டல் கடிதம் :


பாஜக கட்சியில் நடிகர் சுதீப் இணைய உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவிய உடனேயே அவருக்கு மிரட்டல் கடிதங்கள் தெரியாத நபர்களிடம் இருந்து வந்துள்ளன. அந்த மிரட்டல் கடிதத்தில் 'தனிப்பட்ட வீடியோக்கள்' இணையத்தில் லீக் செய்யப்படும் என மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தரங்க வீடியோக்கள் வெளியிடப்படும் என்றும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 506 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 


விக்ராந்த் ரோனா படத்திற்கு பிறகு பிரேக் :


சமீபத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியான 'விக்ராந்த் ரோனா' பிளாக்பஸ்டர் படமாக வெற்றி பெற்றது. அதற்கு பிறகு அவர் வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. விக்ராந்த் ரோனா படத்திற்கு பிறகு அவர் ஒரு நீண்ட பிரேக் எடுத்தது அவர் அரசியலில் குதிக்க போவதாகத்தான் என கூறப்பட்டது. அது குறித்து அவர் விளக்கமளிக்கையில் "விக்ராந்த் ரோனா படத்திற்கு பிறகு எனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டது. இது நான் எடுக்கும் முதல் பிரேக். கோவிட் காலத்தின் கடுமையான தாக்கம், மிகவும் பிஸியான ஷெட்யூல், பிக் பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து பிஸியாக இருந்ததால் ஒரு பிரேக் தேவைப்பட்டது" என்றார்.  கிச்சா சுதீப் அடுத்ததாக மூன்று ஸ்க்ரிப்ட்களில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டாலும் அது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.