கன்னட சினிமா மூலமாக ஹீரோயினாக திரை வாழ்வைத் தொடங்கிய நடிகை ராஷ்மிகா முன்னதாக பிளாக்பஸ்டர் கன்னட சினிமாவான காந்தாரா படத்தைப் பார்க்கவில்லை எனக் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.


கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ரக்‌ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகா நிச்சயதார்த்தம் வரை சென்று காதல் உறவை முறித்த நிலையில், அது அவருக்கு கன்னட சினிமாவில் பெரும் அவப்பெயரைக் கொடுத்தது.


இந்நிலையில், முன்னதாக காந்தாரா படத்தை தான் பார்க்கவில்லை என்று கூறியதோடு, ரக்‌ஷித் ஷெட்டியுடன் நடித்த படத்தை பற்றி பேசியபோது, அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை சொல்ல மறுத்தார்.


இதற்கு பதிலடி தெரிவிக்கும் விதமாக காந்தாரா பட இயக்குநரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி தன் சமீபத்திய நேர்காணலில் ராஷ்மிகாவை அலட்சியப்படுத்தும் விதமாக பதிலளித்தார்.


தொடர்ந்து ராஷ்மிகாவின் படங்கள் கன்னடத்தில் தடை செய்யப்படும் என்று கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னதாகத் தெரிவித்தது.


இந்நிலையில், தொடர்ந்து கன்னட சினிமாத்துறையினரின் வெறுப்பை ராஷ்மிகா சம்பாதித்து வருவது பற்றி பிரபல கன்னட நடிகரும், ‘நான் ஈ’ திரைப்பட வில்லனுமான கிச்சா சுதீப் கருத்து தெரிவித்துள்ளார்.


வாழ்த்து மாலைகளைப் போலவே கற்களையும் பெறும் வகையில் தான் பிரபலங்களின் வாழ்க்கை அமைந்துள்ளது என கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.


தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்து சுதீப், "உள்ளது உள்ளபடி தான். உலகை எப்படி மாற்ற முடியும்? நீங்கள் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றால்  செய்தி சேனல்கள் எங்களை நேர்காணல் செய்தன. அந்த நேரத்தில் அது மிகவும் புதியது. ஆனால் நடிகர் ராஜ்குமாரின் காலத்துக்கு போனால் தூர்தர்ஷன் மற்றும் செய்தித்தாள்களைத் தவிர வேறு எதுவும் இல்லை.


அப்படியானால், இப்போது திடீரென்று ஊடகங்கள் இருப்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்? அது தவறு. ஊடகச் செய்திகளால் எல்லாம் தவறாகப் போகிறது. 


அதைக் கையாள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் எப்போதும் கடந்து செல்ல வேண்டும். மேலும் நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தால் உங்களை நோக்கி மாலைகள் ஒரு பக்கமும், முட்டைகள், தக்காளிகள் மற்றும் கற்கள் ஒரு பக்கமும் வரத் தயாராக இருக்கும்" எனப் பேசியுள்ளார்.


 






முன்னதாக தன்னைப் பற்றி பரப்பப்படும் நெகட்டிவ் செய்திகள், வெறுப்பு பிரச்சாரங்கள் பற்றி தன் இன்ஸ்டா பக்கத்தில் மனம் திறந்து பதிவிட்ட ராஷ்மிகா, வெறுப்பை இப்படி உமிழும் அளவிற்கு என்ன செய்து விட்டேன்... என பெரிய ஒரு கட்டுரையை  பதிவிட்டு கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.