மீடியா கேள்வி என்றால் எப்பேர்பட்டவரும் ஜகா வாங்குவதுண்டு. ஆனால், இன்றளவும் மீடியா பேட்டி என்றால் நின்று நிதானமாக பதிலளித்து எனி மோர் குவெஸ்டீன்ஸ் என்று கேட்டு உறுதிப்படுத்திச் செல்பவர் தான் குஷ்பு. தனது கருத்துகளை எப்போதும் மாற்றிச் சொல்லாமல் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் சூப்பர்ஸ்டார் குஷ்பு.


இது குஷ்புவின் வாழ்க்கைக் கதை.


13 வயதில் ஹீரோயின் ஆனார் குஷ்பு. குழந்தை நட்சத்திரமாக இருந்த அவரை கதாநாயகி ஆக்கியவர் போனி கபூர். நடிப்பில் குஷ்புவுக்கு நாட்டமில்லை. படிப்பில் தான் அவரின் விருப்பம் இருந்தது. ஆனால், தந்தை நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால் நடித்தார். அவர் தான் படங்களை முடிவு செய்துள்ளார். பணத்துக்காக பாலிவுட்டில் பெயர் தெரியாத படங்களில் எல்லாம் நடித்துள்ளார் குஷ்பு. பின்னர் தென்னிந்தியா செல்வோம் என குஷ்புவை அழைத்துக் கொண்டு வந்தார் அவருடைய தந்தை. 1986ல் சென்னைக்கு வந்தார். தெலுங்கு, கன்னடம் என நடித்து சம்பாதித்தார். தமிழில் தர்மத்தின் தலைவன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தமிழே தெரியாமல் அந்தப் படத்தில் நடித்த குஷ்பு ரஜினியை வாடா என அழைத்து ஸ்பாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். பின்னர் பிரபு அதன் அர்த்தத்தை சொல்ல ரஜினியிடம் மன்னிப்பு கேட்டு பின்னாளில் அவருக்கே ஜோடியானார்.


தமிழில் வருஷம் 16 தான் அவருக்கு பெயர் சேர்த்த படம். அதன்பின்னர், ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி என அவர் நடிக்காத நடிகரே இல்லை எனலாம். ஒருகட்டத்தில் பணம் குவிந்தது. ஆனால் அப்பாவின் ஆதிக்கமும் இருந்தது. அப்பாவை கேள்விகேட்க அவர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இப்படி ஒரு தந்தையே தேவையில்லை என முடிவு செய்த குஷ்பு அம்மா, அண்ணன்கள் என வாழ்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியான குஷ்பு, பெயர் பணம் புகழ் என எல்லாவற்றிலும் உச்சம் தொட்டார். கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ குஷ்பூ என்ற பாடல் தமிழ் சினிமாவில் அவரின் முக்கியத்துவத்துக்கு ஓர் அடையாளம்.




தமிழ் நடிகைகளிலேயே தனக்குத்தான் ரசிகர்கள் முதன்முதலில் கோயில் கட்டினார்கள் என்பதை அறிந்து மிகவும் உற்சாகமடைந்த குஷ்பு, தன்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்காக இனி தமிழ்ப் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் என்ற முடிவை எடுத்தார். சின்னத்தம்பி தெலுங்கு, கன்னட ரீமேக்கை தவிர்த்துவிட்டு அண்ணாமலை, சிங்காரவேலனில் நடித்தார். இப்படி சினிமாவில் உச்சியிலிருந்த குஷ்பு 2005 ஆம் ஆண்டு கற்பு குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையாகின.


இதனால், குஷ்பு சந்தித்தப் பிரச்சினைகள் பல. மிரட்டல்கள் அவரைத் துரத்தின. வழக்குகள் குவிந்தன. ஆனால் எதைக் கண்டு அஞ்சி ஓடாத குஷ்பு 2010ல் எல்லா வழக்குகளில் இருந்து விடுபட்டார். இதற்கிடையில் குஷ்பு சுந்தர்.சியை திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பின்னர் நடிப்பைவிட குடும்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தினர். ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி மூலம் வீடு தோறும் சென்று சேர்ந்த குஷ்பு பின்னர் அரசியலில் ஆர்வம் காட்டினார். சமூகத்தில் துணிச்சலாக செயல்பட அரசியல் தேவை என்று அவரே கூறினார். திமுக, காங்கிரஸ் என்று கட்சிகள் மாறி தற்போது பாஜகவில் உள்ளார் குஷ்பு. 


எல்லாப் புகழும் தொட்டுப் பார்த்த குஷ்புவுக்கு மணிரத்னம் படத்தில் நாயகியாக நடிக்கவில்லை என்பது மட்டுமே சினிமாவில் நிறைவேறாத ஆசை எனக் கூறுகிறார்.