கன்னட திரையுலகின் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான திரைப்படம் கே.ஜி.எப். யஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இந்தியளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகமும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகிவருகிறது. இரண்டாம் பாகத்திற்கான டீசர் மட்டும் வெளியாகி, ஒரே நாளில் யூ டியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக தெலுங்கு திரைப்படத்தை இயக்கப்போவதாகவும், அந்த படத்தில் நாயகனாக ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை.
ஜூனியர் என்.டி.ஆர். தற்போது பாகுபலி இயக்குனரான ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். எனும் திரைப்படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து தாமதம் ஆகி வருகிறது. இந்த நிலையில், இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஜூனியர் என்.டிஆர் அடுத்ததாக பிரபல இயக்குநர் கொரட்டலா சிவா படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான கதைக்கரு தயாராகி உள்ளதாகவும் கூறினார். மேலும், இந்த படத்தைத் தொடர்ந்து கே.ஜி.எப். திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறினார். ஜூனியர் என்.டி.ஆரின் இந்த பேட்டி மூலம் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கே.ஜி.எப். 2-ஆம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் தருணத்தில், இந்த அறிவிப்பு ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு அடுத்தாண்டு இறுதி அல்லது அதற்கு அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.