தலைவர் 170


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 170 ஆவது படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டது படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா புரோடக்‌ஷன்ஸ். அதன்படி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரானா டகுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்டவரகள் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.


 


முழுவீச்சில் படப்பிடிப்பு






தலைவர் 170ஆவது படத்துக்கான பூஜை கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்று படபிடிப்பு  தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு கேரளாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தீபாவளியன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள். இந்த படம் குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், சிறந்த சமூக கருத்துள்ள பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் இருக்கும் என்று தெவித்தார்.


ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்


கேரளாவில் நடிகர் ரஜினிகாந்தின் படப்பிடிப்பு நடந்து வருவது கேரள ரஜினி ரசிகர்கள் ரஜினியை  பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி கேரவானில் இருந்து வெளிவருவதற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், ரஜினி அவர்களை பார்த்து கையசைக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக ரஜினி நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியும் மோகன்லாலும் இணைந்து நடித்திருந்தது கேரள ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.






லால் சலாம் 


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது லான் சலாம் திரைப்படம் வெளியாகும் என சமீபத்தில் படக்குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.