தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று சாணி காயிதம். கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இணைந்து நடித்துள்ளதால் ஆரம்பம் முதலே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. டைரக்டர் செல்வராகவன், நடிகராக அறிமுகமான படம் இது தான். ஆனால் அவர் இரண்டாவதாக நடித்த பீஸ்ட் படம் முன்பே ரிலீசாகி விட்டது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்று (மே 6) அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ள நிலையில், படத்தை குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், கீர்த்தி சுரேஷின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ராக்கி படத்தில் அறிமுகமான இயக்குனர் அந்த படம் முழுவதும் வன்முறையை சிதரவிட்டிருந்தார், அருண் மாதேஸ்வரன் சாணி காயிதத்திலும் அதே சம்பவத்தை செய்துள்ளார். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிரட்ட, பின்னணி இசை வழியே சாம் சி.எஸ். படத்திற்கு வலு சேர்த்துள்ளதாக விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்படத்தில் நடித்த அனுபவத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
"அருண் என்னிடம் கதை கூறும் முன், படம் எப்படி இருக்கப் போகிறது, எந்த வகையைச் சேர்ந்தது என்பது பற்றி எனக்கு எந்தத் ஐடியாவும் இல்லை. நான் கேட்க ஆரம்பித்த பிறகுதான் இது எங்கே போகிறது என்று புரிந்தது. கேட்டு முடித்தவுடனே எனக்கு மிகவும் பிடித்திருந்தது." என்று கூறினார்.
பிறகு செல்வராகவன் குறித்து பேசிய அவர், "அவரை ஒரு இயக்குனராக நாம் அனைவரும் அறிவோம், ஆனால் செட்டில் நான் அவரை ஒரு நடிகராக மட்டுமே பார்த்தேன். அவர் அங்கு இருக்கும்போது, தானொரு இயக்குனர் என்ற எதையும் காட்டிக்கொள்ளவே இல்லை. அவர் இயக்கம், கேமரா ஆங்கில், ரூல்ஸ், லைட்ஸ் என எதை பற்றியும் பேசவில்லை. அவர் தன் ஷாட்டை முடித்துவிட்டு மானிட்டரைப் பார்ப்பதுதான் வழக்கம். ஓக்கேயா என்று அருணிடம் கேட்பார், அவ்வளவுதான். படப்பிடிப்பில் அவரது நடிப்பை நான் கவனித்தேன், அவருக்குள் ஒரு மிகச்சிறந்த நடிகரும் இருக்கிறார். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்று நினைக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் அருமையாக இருந்தது, அவருடைய நடிப்பு என்னோடு தொடங்கியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
வித்தியாசமான கதாபாத்திரமான பொன்னி கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து அவர் பேசுகையில், "முதலில் அந்த மீட்டரை பிடிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் அதை கண்டுபிடித்த பிறகு எளிதாக பொன்னியாக மாற முடிந்தது. செய்திகளில் வரும் கிராமத்து பெண்களின் விடியோக்களை எனக்கு அருண் அனுப்பினார். அவற்றை பார்த்து அந்த நுணுக்கங்களை பழகிக்கொண்டேன். அதுமட்டுமின்றி சில ஆங்கில படங்களில் இருந்து எப்படி வன்முறையை கையாள வேண்டும் என்பதை காட்டுவதற்காக காண்பித்தார். அவை அனைத்தும் எனக்கு பொன்னி கதாபாத்திரத்திற்குள் இணைவதற்கு உதவியாக இருந்தது." என்று கூறினார்.