இயக்குநர் மிஷ்கின் தன்னைத் தொட்டுப் பேசியபோது அசௌகரியமாக உணர்ந்ததாக சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலளித்துள்ளார். மேலும், திரைப்படங்களில் நடிப்பதையும் பொதுவெளியில் ஒருவருடன் பழகுவதையும் ஒப்பிட்டுப் பேசுவது தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continues below advertisement

இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராகவும், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். நவம்பர் 20ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷை தொட்டு பேசிய மிஷ்கின் 

இதற்கான விளம்பர நிகழ்ச்சியில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது அவர் கீர்த்தியின் அருகில் அமர்ந்து, அவரது மடிக்கு அருகே கையை வைத்து பேசிய காணொளி இணையத்தில் பரவியது. இதையடுத்து, அந்த நிகழ்வில் கீர்த்தி சுரேஷ் அசௌகரியமாக இருந்ததாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

Continues below advertisement

எக்ஸ் தளத்தில் ஒருவர், “ஒரு ஆண் மென்மையாகத் தொட்டதற்கே கீர்த்தி சுரேஷ் ஏன் இவ்வளவு அசௌகரியப்பட வேண்டும்? திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கும்போது அமைதியாக இருக்கிறார்கள். கீர்த்தியின் முகத்தைப் பாருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

கீர்த்தி சுரேஷ் பதில் 

இந்தப் பதிவைப் பகிர்ந்து பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “முதலில், என் முகத்தில் எங்கே அசௌகரியத்தைக் கண்டீர்கள்? எங்களுக்குள் அப்பா - மகள் போன்ற உறவு இருப்பதாக அவரும் நானும் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? இரண்டாவதாக, திரைப்படங்களில் ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டு நடித்தால், பொதுவெளியிலும் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா? சில விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கீர்த்தியின் பதிலைத் தொடர்ந்து அந்தப் பயனர் தனது பதிவை நீக்கியதுடன், அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். தனக்கு எந்தத் தவறான நோக்கமும் இல்லை என்றும், அந்தக் காணொளி அதிகம் பகிரப்பட்டதால் தானும் பதிவிட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையே, அதே நிகழ்ச்சியில் மிஷ்கின் கீர்த்தி சுரேஷுக்கு தங்க மோதிரம் ஒன்றைப் பரிசளித்ததும் கவனம் பெற்றது. முன்னதாக ‘டோரதி’ திரைப்படத்தில் கீர்த்தியின் நடிப்பைப் பார்த்து வியந்ததாகக் கூறிய மிஷ்கின், அவரை பாராட்டி இந்தப் பரிசை வழங்கினார். மேலும், கீர்த்தி சுரேஷுக்கும் தனக்கும் இடையிலான உறவு தந்தை - மகள் போன்றது என இருவரும் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தனர்.