ஸ்டார்


இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் (Star Movie) படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், நடிப்பில் அவன் சாதிக்க கிடைத்த ஒரு முக்கியமான வாய்ப்பின்போது சந்திக்கும் விபத்து அவன் வாழ்வை எப்படி திருப்பி போடுகிறது? அந்த விபத்தில் இருந்து மீண்டு அவன் சினிமாவில் நடிகனாக , ஸ்டாராக கோலாச்சினானா? என்பதே படத்தின் கதை.


பாராட்டு, பாசிட்டிவ் விமர்சனங்கள்






ட்ரெய்லர் வெளியானது முதல் பல்வேறு ப்ரோமோஷன்கள் என ஸ்டார் படம் மக்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்டார் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ரசிகர்கள் தவிர்த்து திரையுலகினரும் இப்படத்தினை பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் கவினின் அடுத்த படமான பிளடி பெக்கர் படத்தை தயாரிக்கும் இயக்குநர் நெல்சன் இப்படத்தைப் பாராட்டியுள்ளார். கவினின் நடிப்பு, இளனின் திரைக்கதை, யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என எல்லாம் சிறப்பாக இருபதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஸ்டார் படம் வசூல் நிலவரம்


விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ள ஸ்டார் படத்தின் வசூல் நிலவரத்தை கவனிக்கலாம். பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஸ்டார் படம் காலை காட்சிகளில் மட்டும் ரூ.84 லட்சம் வசூலித்துள்ளது. 


சொந்த ஊரில் கலக்கும் கவின்






கவினின் சொந்த ஊரான திருச்சியில் திரையரங்குகளில் அதிகபட்சமாக 85 சதவிகிதம் டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது. திருச்சிக்கு அடுத்தபடியாக பாண்டிச்சேரியில் 69 சதவீதம் , சென்னை 53 சதவீதம் மற்றும் திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூரில் 40 சதவீதம் டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது.


ஸ்டார் திரைப்படம் சுமார் 12 கோடிகள் பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், இந்த வசூல் நிலவரங்களின்படி முதல் நாளே ஒரு கோடிக்கும் மேல் வசூலை ஸ்டார் திரைப்படம் எடுக்கும் என்றும், கவினின் திரை வாழ்வில் முக்கியமான படமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.